திமுகவிடம் போராடி பெற்ற 3 தொகுதிகளிலும்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பின்னடைவு..!
சென்னை: திமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் களம்கண்டது முஸ்லீம் லீக்.

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது 2 தொகுதிகள் மட்டும் கொடுப்பதாக திமுக கூறியது. ஆனால் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்றும் அந்த 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்திலேயே போட்டியிட்டுக் கொள்கிறோம் எனவும் பிடிவாதம் பிடித்தது முஸ்லீம் லீக்.
இதையடுத்து முஸ்லீம் லீக் கேட்டதற்கேற்ப 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. கடையநல்லூரில் சிட்டிங் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர், வாணியம்பாடியில் முகமது நயீம், சிதம்பரத்தில் அப்துல் ரஹ்மான் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
மூன்று தொகுதிகளில் 2 தொகுதிகளிலாவது முஸ்லீம் லீக் வெற்றிபெறும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில் போட்டியிட்ட 3 தொகுதிகளையும் அதிமுகவிடம் பறிகொடுத்துள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட 2 இடங்களிலும் அபாரமாக முன்னிலை வகித்து வருகிறது. பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதுவும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி செல்கின்றனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் தனிச்சின்னத்தை தவிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications