வேலையில்லாமல் இளைஞர்கள் விரக்தில இருக்காங்க.. ஏமாற்றாமல் அக்னிபாத்தை கைவிடுங்க! வேல்முருகன் அட்வைஸ்
சென்னை: சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பது நாட்டிற்கே ஆபத்து என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது.
இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதரிக்கப்பட்டது.

வேல்முருகன் கண்டனம்
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து. நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா என நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

நாட்டிற்கே ஆபத்து
சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில், நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் முடிவு, நாட்டிற்கே ஆபத்தாக முடியும். குறிப்பாக, இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் பணிச் சூழல் மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை நீர்ந்து போகச் செய்தால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

இளைஞர்களின் விரக்தி
குறுகிய கால வேலைவாய்ப்பு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கக் கருவூலத்தின் நிதியைக் கொண்டு அவர்களுக்கு முழு அளவிலான பயிற்சி அளிப்பது மற்றும் ஒப்பந்த முறையில் பணிக்கு நியமனம் செய்வது ஆகியவை இராணுவச் சேவைகளின் தரத்தைக் குறைக்கும். அக்னிபாத் திட்டம் காரணமாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் அதிருப்தி, விரக்தி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது போராட்டத்தின் வாயிலாக தெளிவாகத் தெரிகிறது.

ஏமாற்றாதீர்கள்
எனவே, ஆயுதப் படைகளில் 10 விழுக்காடு ஒதுக்கீடு, வயது வரம்பு தளர்வு என்பது போன்ற பசப்பு வார்த்தைகளை கூறி, நாட்டின் அடுத்த தலைமுறையான இளைஞர்கள், மாணவர்களை ஏமாற்றாமல், அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications