லாவோஸில் நவீன ’ஆடுஜீவிதம்’.. ஐடி வேலை என அழைத்துச் சென்று ஆப்படித்த கும்பல்! உஷார் மாடர்ன் இளைஞர்களே
சென்னை: தாய்லாந்து அருகே இருக்கும் லாவோஸ் நாட்டில் ஐடி வேலை என அழைத்துச் சென்று போலி ஐடி நிறுவனத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்த கும்பலை கைது செய்துள்ள போலீசார், 45க்கும் மேற்பட்ட இளைஞர்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் ஐடி வேலை தேடுவோர் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
வெளிநாட்டு வேலை மோகத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் பலர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். போலி வெளிநாட்டு வேலை ஏஜென்சிகளை நம்பி வேலைக்குச் சென்று வளைகுடா நாடுகளில் ஒட்டகம், ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபட வைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதை வைத்து வெளியான ஆடு ஜீவிதம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நவீன ஆடு ஜீவிதம் மோசடியாக வெளிநாடுகளில் வேலைதேடும் இளைஞர்களை சில போலி முகவர்கள் குறி வைத்து செயல்படுகின்றனர்.
கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகள் மூலம் ஏமாற்றி டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அங்கு அவர்களை இணைய மோசடிகளில் ஈடுபட வைப்பதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலும் இது மாதிரியான சைபர் கிரைம் கும்பல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து செயல்படுகின்றன. சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து வெளிதாடுகளில் வேலைதேடுபவர்களை குறிவைத்து அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு தருவதாகக்கூறி வேலைக்கு எடுக்கின்றனர்.
இந்த ஏஜென்சிகள் அவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைகள், கால்சென்டர் வேலைகள் மற்றும் பிறமென்பொருள் வேலைகளை தருவதாக உறுதிகூறி இந்த வேலைவாய்ப்புகளை நம்பவைக்கின்றன.இவ்வாறு வேலைக்கு சேர்ந்தவர்கள் அந்தந்த நாடுகளை அடைந்தவுடன் அங்கு செயல்படும் சைபர் கிரைம் கும்பல் பாதிக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை சேகரித்து அந்த நாடுகளில் இருந்து வெளியேறவழியில்லை என மிரட்டுகின்றனர் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து , கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பின்னர் அவர்கள் இணைய அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் உள்ள பயணிகள் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்து, அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் போலி ஐடி நிறுவனங்களில் ஏராளமான இந்தியர்கள் இணைய அடிமைகளாக பணியமர்த்தப்பட்டு சைபர் குற்றத்தில் ஈடுபட வைப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த நாட்டில் உள்ள போகியோ மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு போலியாக செயல்பட்டு வந்த சில ஐடி நிறுவனங்களில் இந்தியர்கள் 47 பேர் இணைய அடிமைகளாக பணியமர்த்தப்பட்டு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து இந்திய தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அந்நாட்டு அதிகாரிகள் மூலம் அவர்களை மீட்டனர். 5 நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் என அவர்களை அழைத்து வந்து சைபர் குற்றங்களை ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது 47 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேரை இந்தியாவுக்கும் அனுப்பும் பணிகள் தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
மேலும் கிழக்காசிய நாடுகளில் ஐடி துறையில் வேலை வாய்ப்பு என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இது போன்ற நிறுவனங்கள் இந்திய வெளியுறவுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து உரிய விசாரணைக்கு பிறகு அந்த நிறுவனங்களை இளைஞர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications