முடிவுக்கு வந்த இருண்ட காலம்.. 25% அதிகரித்த ஐடி கேம்பஸ் பிளேஸ்மெண்ட்.. மீண்டும் ஜாக்பாட் தான்!
சென்னை: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைவாய்ப்பு சந்தை மிக மோசமாக இருந்தது. எதிர்பார்த்த அளவுக்குப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல் இருந்தது. ஆனால், இந்த டிரெண்ட் இப்போது மாற ஆரம்பித்துள்ளதாம். 2025-2026 நிதியாண்டில் ஐடி வேலைவாய்ப்பு சந்தை மெல்லச் சீராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 1990கள் முதலே பல காலமாக ஐடி துறையில் தான் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்து வந்துள்ளது. ஒரு பட்டதாரி ஐடி வேலைக்குச் சென்றதால் ஒட்டுமொத்தக் குடும்பமே மாறியுள்ள சம்பவங்களும் கூட பல நடந்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளாகவே இப்படி ஐடி துறை மிக முக்கியமான வேலைவாய்ப்பு சந்தையாக இருந்து வந்துள்ளது.

ஐடி வேலைவாய்ப்புகள்
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஐடி வேலைவாய்ப்பு சந்தை அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இருப்பினும், 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் மீண்டும் நிலைபெறத் தொடங்கியுள்ளது. புதிய பட்டதாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என ஹெச்ஆர் நிறுவனமான அடெக்கோ இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அடெக்கோ இந்தியா இயக்குநர் சங்கத் செங்கப்பா கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்தாண்டு கேம்பஸ் பிளேஸ்மெண்ட் 25% அதிகரித்துள்ளது. முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இருந்து ஐடி நிறுவனங்கள் ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன. இது ஒரு நல்ல டிரெண்டையே காட்டுகிறது" என்றார்.
கணிசமாக அதிகரிப்பு
பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பிரிவுகளில் தேவை 27% உயர்ந்துள்ளது. அதேபோல சம்பள விகிதங்களும் கூட கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5% அதிகரித்துள்ளன. அடெக்கோ இந்தியா நிறுவனம் நடத்திய விரிவான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது..
சங்கத் செங்கப்பா மேலும் கூறுகையில், "புதிதாக வேலைக்குச் சேர்வோர் பெரும்பாலும் பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் டெல்லியில் தான் வேலைக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோவை, உதய்பூர், நாக்பூர், விசாகப்பட்டினம், இந்தூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் கூட வேலைவாய்ப்புகள் 7% அதிகரித்துள்ளன.
சீரான முறையில் ஆட்சேர்ப்பு
பல ஐடி நிறுவனங்கள் தற்போது சீரான முறையில் ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளனர். புதிதாக வேலைக்குச் சேர்வோர் சரியான பணியில் ஈடுபடுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். அதாவது முன்பு மாணவர்களை வேலைக்கு எடுத்து அதன் பிறகு அவர்களுக்குப் பயிற்சி தருவார்கள். ஆனால், இப்போது முதலில் பயிற்சி அளித்து, அதன் பிறகு வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நேரடியாகக் கல்லூரிகளிலேயே பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள், டேட்டா சயின்ஸ்ட் உள்ளிட்ட பணிகளில் 45-50% தேவை அதிகரித்துள்ளது. அந்தத் தேவையைச் சமாளிக்க, இந்த அணுகுமுறை உதவும்.
மறுசீரமைப்புகள்
இப்போது ஐடி சந்தையில் பல்வேறு மறுசீரமைப்புகள் நடந்து வருகிறது. எச்சரிக்கையாக இலக்கு சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இப்போது நிறுவனங்கள் எத்தனை பேரை எடுக்கிறோம் என்பதை விட எந்தத் திறன் உள்ளவர்களை எடுக்கிறோம் என்பதில் முன்னுரிமை அளிக்கின்றன. கிளவுட், டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களில் கவனம் செலுத்துகின்றன. தேவைக்கு ஏற்ப ஆட்கள் இருப்பதை உறுதி செய்யவே விரும்புகிறார்கள். கேம்பஸில் ஆள் எடுப்பதும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் வேலைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வது அவசியம்" என்றார்.












Click it and Unblock the Notifications