850 ஆக உயரும் நாடாளுமன்றத் தொகுதிகள்.. தொகுதி மறுவரையறை என்றால் என்ன? தென்னிந்தியா ஏன் பாதிக்கும்?
சென்னை: நாடாளுமன்ற மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதைய 543-லிருந்து 850 ஆக உயர்த்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இதற்காக இன்று முதல் 18 வரை நடைபெறவுள்ள சிறப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று முக்கிய மசோதாக்களை அரசு தாக்கல் செய்கிறது.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை இதற்கான காரணங்களாக அடுக்குகிறார் பிரதமர் மோடி. ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் 'அரசியல் கணக்கு'தான் இப்போது தென் மாநிலங்களை அதிர வைத்திருக்கிறது.

என்ன நடக்கிறது?
இந்தியாவில் கடைசியாக 2002-ல் தொகுதி மறுவரையறை (Delimitation) நடந்தது. ஆனால், அப்போது தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றப்பட்டன; இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இப்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய 'டி-லிமிட்டேஷன்' கமிஷனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
வடக்கின் எழுச்சி... தெற்கின் வீழ்ச்சி?
மத்திய அரசின் உத்தேச திட்டத்தின்படி 850 இடங்கள் உருவானால், அதில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் கோட்டைவிட்ட வட மாநிலங்களுக்கு 'பம்பர் பரிசு' கிடைக்கப்போகிறது. மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு 'தண்டனை' கிடைக்கப்போகிறது.
யார் யாருக்கு எவ்வளவு உயரும்? (உத்தேச கணக்கு):
உத்தரப்பிரதேசம்: 80 -> 140 (மெகா ஜாக்பாட்!)
பீகார்: 40 -> 73
ராஜஸ்தான்: 25 -> 48
மத்திய பிரதேசம்: 29 -> 51
தென்னிந்தியா நிலை என்ன?
தமிழ்நாடு: 39 -> 51 (வெறும் 12 இடங்கள் மட்டுமே உயர்வு!)
கேரளா: 20 -> 23
ஆந்திரா + தெலங்கானா: 42 -> 59
நாட்டின் ஜிடிபி-யில் 31% பங்களிப்பை வழங்கும் தென் மாநிலங்கள், அரசியல் அதிகாரத்தில் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. அதிக இடங்கள் உயரும் மாநிலங்கள் அனைத்தும் தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"இது ஒரு சதித் திட்டம்!" - கொதிக்கும் தலைவர்கள்
இந்த விவகாரத்தில் தென் மாநில முதல்வர்கள் மிகக் காட்டமான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர்.
"மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களைத் தண்டிப்பதா? இது ஒரு அரசியல் சதி. தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க நினைத்தால் மாபெரும் போராட்டங்களைச் சந்திப்பீர்கள்" என எச்சரித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக திமுக எம்பிக்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியோ ஒரு படி மேலே போய், "மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ளும் 'ஹைப்ரிட் மாடல்' (Hybrid Model) கொண்டு வரப்பட வேண்டும்" எனப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் ஜெயராம் ரமேஷ், "பெண்கள் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கூட்டாட்சித் தத்துவத்தை புல்டோசர் கொண்டு இடிக்கப் பார்க்கிறது பாஜக" எனச் சீறியுள்ளார். சிவசேனாவின் சஞ்சய் ராவத்தோ, "இது இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றிவிடும்; மணிப்பூரில் நிலவுவது போன்ற பதற்றம் தெற்கிலும் உருவாக வாய்ப்புள்ளது" என பகீர் கிளப்பியுள்ளார்.
அடுத்தது என்ன?
850 என்பது அதிகபட்ச எண்ணிக்கைதான், இறுதி எண்ணிக்கையை கமிஷன் முடிவு செய்யும் என அரசுத் தரப்பு கூறினாலும், 'கெர்ரிமாண்டரிங்' (Gerrymandering - ஆளுங்கட்சிக்குச் சாதகமாக தொகுதிகளைப் பிரித்தல்) நடக்குமோ என்ற அச்சம் அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டுமென்றால் தொகுதி மறுவரையறை அவசியம் என்கிற 'நிபந்தனை'தான் சர்ச்சையின் ஆணிவேர்.
வளர்ச்சிக்குத் தண்டனையா? எண்ணிக்கைக்குப் பரிசா? டெல்லியின் இந்த 'மூவ்' இந்திய ஜனநாயகத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை எந்தப் பக்கம் தள்ளப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications