2025ல் சுற்றி சுற்றி டூர் போன இந்தியர்கள்.. அதிக மக்கள் குவிந்த பகுதிகள் எவை? 3ம் இடம் செம சர்ப்ரைஸ்
சென்னை: நடப்பாண்டில் இந்தியர்கள் அதிகம் விரும்பி சென்ற இடங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 7 இடங்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்று இருக்கும் நிலையில், அதில் 3வது இடத்தில் இருக்கும் ஊர் உண்மையாகவே பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியர்கள் இப்போது பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா செல்கிறார்கள். முன்பெல்லாம் தாஜ் மஹால், செங்கோட்டை எனக் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா இருக்கும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் பல இடங்கள் சுற்றுலா தளங்களாக மாறியுள்ளன, இதற்கிடையே இந்தியர்கள் அதிகம் விரும்பி சென்ற இடங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!

மகா கும்பமேளா
நடப்பாண்டில் இந்தியர்கள் அதிகம் சென்ற இடமாக மகா கும்பமேளா இருக்கிறது. மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். இதனால் பல லட்சம் பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று புனித நீராட பிரயாக்ராஜில் திரண்டனர். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டமும் அதன் மத முக்கியத்துவமும், உலகெங்கும் இருந்து இந்துக்களை இங்கு அழைத்து வந்தது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதால் பலரும் இங்குக் குவிந்தனர்.
காஷ்மீர்
அதேபோல நடப்பாண்டில் காஷ்மீருக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. அங்கிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது, தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மற்றும் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாக காஷ்மீர் இருக்கிறது. பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள், தூய்மையான ஏரிகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள் பயணிகளை இப்பகுதிக்கு ஈர்த்தன. இங்குக் குறிப்பிட்ட மாதங்களுக்கு அப்பால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
செம சர்ப்ரைஸ்
இதில் 3வது இடத்தில் இருக்கும் இடம் தான் நிச்சயம் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். 2025ல் இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணித்த இடங்களில் 3வது இடத்தில் புதுச்சேரி இருக்கிறது. அதன் பிரெஞ்சு கட்டிடக்கலை, அருமையான சாலைகள், வெள்ளை கலர் கட்டிடங்கள் மற்றும் அமைதியான கடற்கரை ஆகியவை நாடு முழுக்க உள்ள மக்களைப் புதுச்சேரி நோக்கி வரவழைத்துள்ளது. ஆண்டு முழுக்கவே புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்துள்ளது.
கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட இன்னுமே அதன் மவுசு முழுமையாகக் குறையவில்லை. அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரு இடமாகவே கோவா இருக்கிறது. கோவாவுக்குக் கடற்கரைகள் தான் முக்கியமான ஈர்ப்பாக இருக்கிறது. இருப்பினும், இப்போது கோவா உணவு கலாச்சாரம், இந்திய-போர்த்துகீசியப் பாரம்பரியம் ஆகியவை மக்களை ஈர்க்கிறது. நீர் விளையாட்டுகள், பழைய தேவாலயங்கள் மக்களை அதிகம் ஈர்க்கிறது.
லடாக்
இதில் 5வது இடத்தில் லடாக் இருக்கிறது. நம்ம ஊரிலேயே பலரும் லடாக் போகிறேன் என உந்துருளியை எடுத்துக் கொண்டு கிளம்புவதைச் சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ளோம். அதுபோலத் தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் மக்கள் லடாக் குவிகிறார்கள். அமைதியையும் இயற்கை அழகையும் தேடி மக்கள் லடாக் செல்கிறார்களாம். சவாலையும் தெளிவையும் தேடுவோருக்கான ஒரு முக்கிய இடமாக லடாக் நின்றது. அதன் கரடுமுரடான நிலப்பரப்பு, உயரமான மலைப்பாதைகள், பிரம்மாண்ட ஏரிகள் சாகசப் பிரியர்களைத் தொடர்ந்து ஈர்க்கிறது..
காசி
அடுத்த இடத்தில் மற்றொரு உத்தர பிரேதச நகரமான வாரணாசி வருகிறது. உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாக அறியப்படும் வாரணாசி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்துக்கள் வருகை தருகிறார்கள். காசி போனால் பாவத்தைக் கழிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே இருக்கிறது. இதன் காரணமாகவே வாரணாசி செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்தது உதய்பூர் தான் இந்த லிஸ்டில் வருகிறது. உதய்பூர் மன்னர் கட்டிடக்கலையும் அமைதியான ஏரிகளும் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. "ஏரிகளின் நகரம்" என அழைக்கப்படும் உதய்பூர், அதன் அரண்மனைகள், ஹவேலிகளுக்கு பெயர் போனது. சூரிய அஸ்தமனத்தின் போது பிச்சோலா ஏரியில் படகு சவாரிகளும், சிட்டி பேலஸில் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்துச் சுற்றுலாப் பயணிகளும் செல்ல விரும்பும் இடமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications