இன்று நடக்கிறது 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல்.. களமிறங்கிய கட்சிகள்.. நெல்லிக்குப்பம் யாருக்கு?
இன்று 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது
சென்னை: குளறுபடிகள், சர்ச்சைகள் உட்பட பல்வேறு காரணங்களால், தேர்தல் நடத்தமுடியாமல் போன காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்து முடிந்தது.. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.
இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களும் கடந்த 2-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

துணை மேயர்
இதற்கு பிறகு, மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்து முடிந்தது.. இதில்தான் பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டன.. அதனால், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.. அந்த வகையில், 62 பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தலை அப்போது நடத்த முடியவிலை.

மறைமுக தேர்தல்
அந்த காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்குத்தான் இன்றைய தினம் மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.. இதை ஏற்கனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தும் இருந்தது.. அதன்படி, இன்று 9.30 மணிக்கு நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும், மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் என ஒரே நாளில் 2 தேர்தல் நடக்க உள்ளது.. மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்றைய தினமே தயாராகி விட்டன.

துணைத்தலைவர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி தலைவர், துணைத் தலைவர், திருமழிசை, மீஞ்சூர் பேரூராட்சிகளில் துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கழி நாடு பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது... பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் இருக்கின்றன.. இதில் திமுக 12, அதிமுக 2, காங்கிரஸ்-1, சுயேட்சைகள்-6 இடங்களை பிடித்திருக்கின்றனர்.

திமுக
கடந்த 4-ந் தேதி நடந்த மறைமுக தேர்தலின்போது தலைவர் வேட்பாளராக திமுக தலைமைக்கழகம் அறிவித்த 18-வது வார்டு உறுப்பினர் காஞ்சனாவை எதிர்த்து அப்போதைய திமுக நகர செயலாளர் ரவிக்குமாரின் மனைவி மாலதி போட்டி வேட்பாளராக களத்தில் குதித்தார்... இதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது... எனவே இன்றைய தினம் இந்த தேர்தல் நடக்கும் நிலையில், பலத்த போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லிக்குப்பம்
திமுக தலைமை அறிவித்தபடி, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் நெல்லிக்குப்பம் நகர மன்ற துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதேபோல, ஏற்கனவே நகராட்சி தலைவர் மற்றும் துணைதலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கிரிஜா திருமாறன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இன்று மதியம் நடைபெறும் மறைமுக தேர்தலில் என்ன நடைபெறும் என்ற பரபரப்பான நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கி பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications