தனிப்பட்டா கேட்டால் கூட்டு பட்டா? தனி பட்டா, கூட்டுப்பட்டாவில் வந்த சிக்கல்.. வருவாய் துறை தந்த ஹோப்
சென்னை: தமிழக அரசு துறைகளிலேயே, வருவாய்த்துறையில்தான் அதிக லஞ்ச புகார்கள் பதிவாகி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.. தாங்கள் பாடுபட்டு வாங்கும் சொந்த நிலத்துக்கு பட்டா வாங்குவதற்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும்? நிலத்தை அளப்பது அதிகாரிகளின் பணியாக இருக்கும்போது, எதற்காக சர்வேயர்களுக்கு பணம் தர வேண்டும்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்நிலையில், வீடு, மனை வாங்குவோர் தங்கள் பெயரில், தனி பட்டா கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு கூட்டு பட்டா வழங்கப்படுவதாக புகார் முளைத்துள்ளது.
வீட்டு மனைக்கு பட்டா வாங்க முற்படும்போது, அதில் யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து பெயர்களுடன் குறிப்பிட்டிருக்கும் ஆவணத்தின் பெயர்தான் கூட்டு பட்டா என்பார்கள்.. கூட்டுப் பட்டாவிலிருந்து தனி பட்டா (Individual Patta) பெற வேண்டும்..

சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் பெயர், சர்வே நெம்பர் உட்பிரிவு எண் என அனைத்துமே தனித்தனியாக எழுதப்பட்டிருந்தால் அதற்கு தனிப்பட்டா என்று பெயர். இந்த தனிப்பட்டாவை பெற மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் அவசியம்.
ஆவணங்கள் அவசியம்
மேலும், கூட்டுப்பட்டா, முந்தைய பட்டா நகல், பரிசளிப்பு ஆவணம், விற்பனை சான்று, பகிர்வு உடன்படிக்கை, நில வரைபடம், சொத்து வரி செலுத்திய ரசீது, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, நிலத்தை அளப்பதற்கான கோரிக்கை மனு, பிற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் போன்ற ஆவணங்கள் இருந்தால்தான், கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாவை பெற முடியும்.
இவ்வளவையும் சேகரித்து தயார் செய்து விண்ணப்பத்தால் சில அதிகாரிகள், ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் கேட்டுவிடுகிறார்கள். அதனால்தான் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்கள், நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு போனை போட்டு புகார் சொல்லிவிடுகிறார்கள்.. போலீசாரும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பொதுவெளியிலேயே கைது செய்து வருகிறார்கள்.
கூட்டுப்பட்டா தனிப்பட்டா
இந்நிலையில், தனி பட்டா கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு கூட்டு பட்டா வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் சொல்கிறார்கள்..
கூட்டு பட்டாவில் உள்ள சொத்துக்களில், ஏதாவது ஒரு பாகத்தை வாங்கும் நபர்கள், தங்கள் பெயரில் தனி பட்டா கோரி விண்ணப்பிக்க நேரிடுகிறது. இதில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து, புதிய உட்பிரிவு எண் ஒதுக்கி, அதன் அடிப்படையில் தனி பட்டா வழங்க வேண்டும். ஆனால் சிலசமயம், தனி பட்டா கோரிய விண்ணப்பங்களை வேறு பிரிவுக்கு மாற்றி, கூட்டு பட்டா தந்துவிடுகிறார்களாம்.
உட்பிரிவுடன் தனி பட்டா
இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் விசாரித்தாலும், உட்பிரிவுடன் தனி பட்டாவுக்கு மறுபடியும் விண்ணப்பிக்க சொல்கிறார்களாம்.. இப்படியொரு புகார்கள் ஆங்காங்கே கிளம்பியுள்ளதால், பட்டாவை பெற முடியாமல் விண்ணப்பதாரர்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. எனவே இதற்கு தீர்வு காண சொல்லி கோரிக்கையும் எழுந்துள்ளது..
இந்நிலையில், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், உரிய விபரங்களுடன் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் வாயிலாக நில அளவை பணி முடித்து, பட்டா வழங்க உரிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளதால், இது குறித்த விபரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க, தாசில்தார்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications