ஈர்த்த ஈஞ்சம்பாக்கம்.. "சத்தியமா சொல்றேன் சீமான் சார், ரொம்ப நன்றி".. ஒரேநாளில் அசரடித்த சென்னை பெண்
சென்னை: "சத்தியமா சொல்றேன் சீமான் சார்.. உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி" என்று இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை தாக்கவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்..

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று அதிமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
திமுக அரசு: ஆனால், "ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்" என்று திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்..
வீடியோ: அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீமானுக்கு இருகரம்கூப்பி நன்றி தெரிவித்ததுடன், முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். சீமான், நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இளம்பெண் பேசிய இது காட்சிகள்தான் இணையத்தில் வெளியாகி உள்ளன.
"ஈஞ்சம்பாக்கம் மெஜஸ்டிக்கில் இருந்து பேசறோம்.. இங்கே யாருமே வரல.. நிலைமை மோசமாயிருக்கு.. வாலண்டியர்ஸ் நாங்க மட்டும்தான் இறங்கி நிவாரண பணிகளை செய்துட்டு இருக்கோம்.. வேற யாருமே வரலைன்னு குற்றச்சாட்டு வெச்சிட்டு இருந்தோம். இந்த நிலைமையில் சீமான் சார் இங்கே வந்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்..
மெழுகுவர்த்தி: இங்கே இடுப்பளவுக்கு தண்ணீர் நிக்குது. மக்கள் எல்லாருமே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. இன்னும் கொஞ்சம் முன்னாடி நடந்து போனால், நெஞ்சளவுக்கு தண்ணீர் நிக்குது.. அடிப்படை தேவைகள் எதுவுமே இங்கே இல்லை.. நாப்கின், சாப்பாடு, மெழுகுவர்த்திகூட கிடைக்கல.. கரண்ட் இந்த பகுதியில் இல்லை. இந்த நிலைமையில் சீமான் சார், தன்னுடன் பணியாளர்களை அழைத்து வந்துள்ளார்..
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி சார்.. யாருமே இங்கே வராத பட்சத்தில் நீங்க இங்கே வந்தது ரொம்ப உதவியா இருக்கு.. சீமான் சாரை போலவே, இன்னும் நிறைய பேர் இங்கே வந்து எங்களுக்கு உதவி செய்யணும்.. அடிப்படை தேவைகள் இங்கே இல்லை.. மழை நின்னு 3 நாளாகிவிட்டது.
வீடியோ: ஆனால் அரசு தரப்பில் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கல. சும்மா பெயரளவுக்கு வெளிப்புறத்திலேயே வந்து நின்று, அரிசி தந்துட்டு, போட்டோவுக்கு போஸ் தருவதில் பலனில்லை.. ஏரியாவுக்குள் உள்ளே வந்து உதவி செய்யுங்க.. ஆனால் சத்தியமாக சொல்றேன் சீமான் சார்.. உங்களுக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இளம்பெண் கைகூப்பி நன்றி சொன்னதுமே, சீமானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து, நன்றியை ஏற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications