கோவை கார் சிலிண்டர் வெடிப்பு- திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல்? உளவுத்துறை சந்தேகத்தால் 'ஷாக்'
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம், திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல் என உளவுத்துறை சந்தேகிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலையில் கார் ஒன்று பயஙகர சப்தத்துடன் வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர்கள் துண்டு துண்டாக உடைந்து சிதறி கிடந்தன. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த இடத்தில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

ஜமேசா முபின்
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கூட்டாளிகள் 5 பேர் கைது
பின்னர் முபின் வீட்டின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் முபினும் அவரது கூட்டாளிகளும் கனமான பொருள் ஒன்றை காரில் ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த கனமான பொருள் சிலிண்டராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து முபின் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்கொலைப்படை தாக்குதல்?
இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு என்பது தற்செயலானது அல்ல; திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். முபினின் செல்போன் டிஸ்பிளே மெசேஜானது, நான் இறந்துவிட்ட செய்தி உங்களை வந்தடையும் போது என்னுடைய தவறுகளை நீங்கள் மன்னித்துவிடுங்கள்; எனக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள் என இடம்பெற்றிருக்கிறது. ஆகையால் முபின், காரில் அமர்ந்தபடி தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.

என்.ஐ.ஏ. விசாரணை- தற்கொலை படை தாக்குதலா?
உளவுத்துறையின் இந்த சந்தேகத்துக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுவது 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ, முபினிடம் நடத்திய விசாரணைதான். இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலை படை தாக்குதல்கள் தொடர்பாக பல நாடுகளில் விசாரணை நடத்தப்பட்டது. கோவையில் இலங்கை தற்கொலைப் படை தாக்குதல்தாரிகளுடன் தொடர்பில் இருந்த அசாருதீன் உட்பட 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போதுதான் முபினும் சந்தேக வளையத்தில் சிக்கினார். இதனால்தான் ஜமேசா முபின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் எனவும் உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி
இதே சந்தேகத்தை புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தமது அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளார். அதில், விபத்துக்குள்ளான காரில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான இரும்பு ஆணிகள், கோலிகுண்டுகள் போன்ற பொருட்கள் இருந்ததாகவும்; அவரது வீட்டைச் சோதனையிட்ட பொழுது அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டதாகவும்; அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக என்.ஐ.ஏ கண்காணிப்பில் இருந்ததாகவும் வலுவான ஆதாரப்பூர்வ தகவல்களும் வருகின்றன. இந்த கார் வெடிப்பின் மூலமாக, தற்போது இறந்து போனவரின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெளிவாகத் தெரிகிறது எனவும் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications