நீங்க ரெஸ்ட் எடுங்க அய்யா.. பாமகவில் ராமதாஸையே எதிர்க்கும் பாட்டாளிகள்? சமூகவலைதளங்களில் கலகம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்பாட்டில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்திய நிலையில் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர் பாட்டாளிகள். குறிப்பாக அன்புமணி ராமதாசை பாராட்டாததால் 'நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் ஐயா' என்ன பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர்கள் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது வழக்கம். வன்னியர் சங்க தலைவராக காடுவெட்டி குரு இருந்தபோது 20 மாநாடுகளில் பத்து மாநாடுகளை அவரே முன்னின்று நடத்தி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவில்லை.
இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. மாநாட்டு குழு தலைவராக அன்புமறைய ராமதாஸ் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில் மாநாட்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி மே 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் மாநாடு நடைபெற்றது. பாராகிளைடரில் வன்னியர் சங்க கொடி, ட்ரோன் ஷோவில் அஞ்சலை அம்மாள், காடுவெட்டி குரு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் உருவங்களோடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் கலை நிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் இதுவரை இல்லாத அளவு மாநாடு சிறப்பாக நடைபெற்றதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறினர். அன்புமணி ராமதாஸ் பேசும்போது, இளைஞர்கள் என் பின்னால் வரவேண்டும் கல்வியும் வேலை வாய்ப்பு நான் உங்களுக்கு பெற்று தருகிறேன் என பேசி இருந்தார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ் கூட்டணி உள்ளிட்ட அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்குள்ளே கூட்டணி வேண்டாம் என பேசியது பாமக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த அன்புமணியை ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ராமதாஸின் வயதை, மனநிலையை பயன்படுத்தி சிலர் அவரை பின்னணியில் இருந்து இயக்குவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததால் அன்புமணி - ராமதாஸ் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டிலேயே மறைமுகமாக சில கருத்துக்களை ராமதாஸ் பேச அது பாமக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே கட்சி பதவி தொடர்பாக ஜிகே மணி உள்ளிட்டோர் அன்புமணி ராமதாஸ் எதிராக செயல்பட்டு வருவதாகவும் வெளியில் இருந்து கூட சிலர் பாமக நிறுவனர் ராமதாஸை இயக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர்.
ராமதாசுக்கு அடுத்த கட்சியின் முகம் என்றால் அது அன்புமணி ராமதாஸ் தான். ஆனால் அதை வசதியாக மறைத்து விட்டு வேறு சிலரை கட்சிக்குள் கொண்டு வர, சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் முயற்சிக்கின்றனர். இதில் திமுகவின் தலையிடும் இருக்கிறது என புலம்புகின்றனர். இதுவரை வன்னியர் சங்க மாநாடு சிறப்பாக நடைபெற்று இருந்தாலும், நேற்று நடந்த மாநாடு முற்றிலும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் பிரம்மாண்டமாகவும் இருந்தது. அதற்கெல்லாம் அன்புமணி ராமதாஸின் ஐடியா தான் காரணம்.
ஆனால் சிலர் அவரையே ஓரம் கட்டுவதாக நினைத்து தாங்களாகவே தங்களை ஓரம் கட்டிக் கொள்கிறார்கள். நிச்சயம் அனைவரும் அன்புமணி ராமதாஸின் பின்னால் தான் இருக்கிறார்கள் என கூறுகின்றனர். தற்போது ஒரு படி மேலே போய் கட்சியின் நிறுவனரான ராமதாசையே விமர்சிக்க தொடங்கி விட்டனர். கூட்டத்தை அழைத்து வந்தது எல்லாம் வேஸ்ட் என்ன செய்வது பேசியது ஐயா ஆயிற்றே என ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருவர் ஐயா நீங்கள் ரெஸ்ட் எடுங்க அய்யா என பதிவிட்டு இருக்கிறார். இதுவரை இவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்காக சமூக வலைதளங்களிலும் நேரடி அரசியலிலும் தீவிரமாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களது கருத்தை பலரும் ஆமோதித்து வருகின்றனர். மாநாடு சிறப்பாக நடைபெற்றாலும் ராமதாஸின் பேச்சு பாமக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த மாநாட்டில் அதிக அளவில் திரண்ட நிலையில் அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் எதிர்காலம் என அவர்கள் நினைப்பதாகவும், ஏற்கனவே ஜிகே மணி உள்ளிட்டவரை ஓரம் கட்டி வரும் நிலையில், ராமதாசையே அவர்கள் தற்போது கட்சியில் சமூக வலைதளங்களில் எதிர்த்து பேசி வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications