பச்சைக் கொடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்.. பல ஆயிரம் கோடி முதலீடு.. இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் அதாவது பிப்ரவரி 23ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதே இந்த கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அமைச்சரவைக் கூட்டம் அவசியமா என்ற கேள்வி எழக்கூடும், ஆனால் இந்த முறை சூழல் முற்றிலும் வேறானது..

இடைக்கால பட்ஜெட்
பிப்ரவரி 17ம் தேதியே 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்தத் தொடர் கூட்டமானது பட்ஜெட் அம்சங்களைத் தாண்டி மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேர்தல் காலத் திட்டங்களை மையமாகக் கொண்டு அமையவுள்ளது..
இன்று மாலை 6.00 மணி அல்லது 6.30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்..
தமிழக அமைச்சரவை கூட்டம்
சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக சில முக்கியத் திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்புக் காட்டுகிறது..
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் புதிய முதலீடுகளுக்குப் பச்சைக்கொடி காட்டுவது இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும்.. புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதன் மூலம், தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தின் பொருளாதார வலிமையை நிலைநாட்ட முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
வெறும் நிதி ஒதுக்கீடுகளைத் தாண்டி, இந்த அமைச்சரவை கூட்டம் ஒரு கொள்கை முடிவெடுக்கும் தளமாகச் செயல்படுகிறது.. குறிப்பாக, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு எழும் சவால்களைக் கையாள்வது குறித்தும் அமைச்சர்களுக்கு முதல்வர் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
பச்சைக் கொடி - ஸ்டாலின்
அமைச்சரவையின் இந்த முடிவுகள் நேரடியாக தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. கடந்த சில மாதங்களாக ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பதன் மூலம், தமிழகம் இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலம் என்ற பிம்பத்தை வலுப்படுத்த இந்தச் சந்திப்பு உதவும்..
சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், அரசு நிர்வாகம் தொய்வின்றி நடப்பதையும், மக்கள் திட்டங்கள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்வது அமைச்சரவையின் கடமையாகும்.. அந்த வகையில் இந்த பிப்ரவரி 23 இன்றைய கூட்டம் என்பது வெறும் அரசு அலுவல் சார்ந்த சந்திப்பு மட்டுமல்லாமல், தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகவும் அமையும் என நம்பப்படுகிறது...
அதனால்தான் மக்கள் நலன் சார்ந்த சில கூடுதல் அறிவிப்புகள் அல்லது கொள்கை முடிவுகள் இக்கூட்டத்தின் முடிவில் வெளியாகக்கூடும் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தலைமைச் செயலகத்தை நோக்கியே உள்ளது..












Click it and Unblock the Notifications