ஏப்.30 ல் சிஎஸ்கே- பஞ்சாப் அணி மோதல்! சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடக்கம்! லேடீஸுக்கு தனி கியூ
சென்னை: ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை- பஞ்சாப் அணி இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று டிக்கெட்டுகள் விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் பெண்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
16 ஆவது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுன்ட்டர்களிலும் ரூ 1500 டிக்கெட் விற்கப்படுகின்றன.
2000, 2500 ரூபாய் டிக்கெட்டுகள் கவுன்ட்டர்களிலும் பே டிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ 3000, ரூ 5000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது.
இந்த டிக்கெட்டை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதற்காக நேற்று இரவு முதல் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடுகிறது என்றும் ரசிகர்கள் என்ற பெயரில் பலர் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கி அதை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்தது. இந்த முறையாவது உண்மையான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications