இறையன்பு பின்னாடியே வரும் அந்த "மிஸ்டர் கிளீன்" யார்.. "ஜூனியர்" மீது விழுந்த ஸ்டாலினின் கண்.. ஓ அவரா
சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு, இந்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அந்த பதவியை பிடிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. தலைமை செயலாளர் பதவிக்கான வழக்கமான நடைமுறைகள் என்ன? அடுத்த தலைமை செயலாளர் யாராக இருக்கும்? என்பது குறித்த சில தகவல்கள் வலம் வருகின்றன.
அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவின் அனுபவத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில், இப்போது தலைமைச் செயலாளர் பதவியை, முதல்வர் ஸ்டாலின் அளித்து அழகு பார்த்துள்ளார் என்றாலும், இன்னும் சிலகாலம் அவரை தங்களுடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்ததாக தெரிகிறது.
பணி ஓய்வு: அதாவது, பணி ஓய்வு பெறும்போதும் அவருக்கு வேறு சில முக்கிய பதவிகளை தர தயாராகவே இருந்ததாகவும், அதனால்தான், இறையன்புவை தலைமை தகவல் ஆணையராக நியமிக்கவும், திமுக மேலிடம் யோசித்ததாகவும் சொன்னார்கள்.. காரணம், இறையன்பு போன்ற நேர்மையும், துடிப்பும் மிக்க அதிகாரிகள் என்றென்றும் தங்களுக்கு தேவை என்பதை திமுக மேலிடம் நன்கு உணர்ந்துள்ளது.. ஆனால் இந்த பதவியை ஏற்க இறையன்பு முன்வரவில்லை.

தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. அத்துடன், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே இறையன்பு தொடர்வார் என்றும் தெரிகிறது.
ஒருவேளை புதிய தலைமை செயலாளரை நியமிக்க வேண்டி வந்தாலும், தன்னுடைய வேகத்துக்கும், சுறுசுறுப்புக்கும் ஈடுகொடுக்கும் வகையில், "மிஸ்டர் கிளீன்" அதிகாரிகளில் ஒருவரை, புதிய தலைமை செயலாளராக முதல்வர் தேர்வு செய்வார் என்கிறார்கள்.. மேலும், இது தொடர்பாக நன்கு ஆலோசித்தே முடிவெடுப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
சீனியர்கள்: இப்போது, புதிய தலைமைச் செயலரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருக்கும் தலைமை வகிக்கும் பொறுப்பு என்பதால், மூத்த ஐஏஎஸ்களின் கனவாகவே, இந்த பதவி பிரம்மாண்டமாக நின்றுள்ளது.. தலைமைச் செயலர் பதவிக்கு வர முடியாமல், ஓய்வு பெறுவோர் அதிகமாகவே உள்ளனர்.. ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது.
அந்தவகையில், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இப்போதைக்கு 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.. இவர்களில் மூன்று பேர் பெயர்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தாலும், தமிழக முதல்வர் முதல்வர் யாரை விரும்புகிறாரோ, அவரை மட்டுமே தலைமை செயலாளராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்..
சீனியாரிட்டி: பணிமூப்பு ஒரு கணக்கீடாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்டவர் அரசுடன் இணக்கமாக செல்பவராக இருக்க வேண்டும். அதனால், சீனியாரிட்டி அடிப்படையில், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், இளையவராக உள்ளவரையும், தலைமை செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. அப்படி இளையவரை தேர்வு செய்தால், அவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்ற விபரத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒருவேளை, மாநில அரசு தேர்வு செய்தவர் மீது, ஏதாவது, புகார்கள் இருந்தால், மத்திய அரசு அதற்கான விளக்கத்தை கேட்கும். ஆனாலும், இதுவரை மாநில அரசு தேர்வு செய்யும் நபரே, தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டு வருகிறது.
நடைமுறைகள்: வழக்கமான நடைமுறையின்படி, 3 பேர்களை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவுக்கும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கும் இடையே, கடும் போட்டி உள்ளதாக சொல்கிறார்கள்.. இவர்களை தவிர, மேலும் 3 பேர் டாப் லிஸ்ட்டில் உள்ளனர்..
எனினும், ஸ்டாலின் யாரை தேர்வு செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.. திமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுவதற்கும், அரசு இயந்திரம் வேகம் குறையாமல் சீராக இயங்குவதற்கும் யார் பொருத்தமாக இருப்பார் என்பதையும் அறிந்துதான் முதல்வர் தேர்வு செய்யக்கூடும் என தெரிகிறது. எனவே, யார் அந்த "இளையவர்" என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை கூட்டம்: இதனிடையே, தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஒரு வருடம் பணி நீட்டிப்பு பெற்று, இப்போது அவர் பணியை நிறைவு செய்கிறார். இதையடுத்து புதிதாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.
புதிய டிஜிபிக்கான லிஸ்ட், தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, இப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications