ரோல் மாடல்.. “நெகிழ வைத்த மாணவர்கள்”.. இறையன்பு தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கார்னு பாருங்க!
சென்னை: பணி ஓய்வுக்குப் பிறகு மாணவர்களுடன் அதிக நேரத்தைச் செலவழித்து வரும் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, இன்று கண்ணகி நகரில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே நாளில் தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இறையன்பு ஐஏஎஸ், தனது நேர்மையான குணத்தால், தனது பணிக்காலம் முழுவதும் மக்களின் அபிமானம் பெற்றவராக திகழ்ந்தார்.

1988ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இறையன்பு, ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தவர். நாகப்பட்டினம் உதவி கலெக்டராக தனது ஐ.ஏ.எஸ் பணியை தொடங்கிய இறையன்பு, காஞ்சிபுரம் கலெக்டர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளில் செயலராகப் பணியாற்றினார். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலாளர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.
மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் பெயர் எடுத்தவர் இறையன்பு. கலெக்டராக, துறை செயலாளராக இருந்த காலத்தில் இறையன்பு ஐஏஎஸ் பொதுமக்களால் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தவர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரான பிறகும், தனது நேர்மையை விட்டுக்கொடுக்காமல் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காமல் பணியாற்றினார். தனது இடையறாத அரசுப்பணிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார் இறையன்பு.
தலைமை செயலராக நியமிக்கப்பட்டதுமே அவர் போட்ட ஒரு ஆர்டர் கவனம் பெற்றது. தான் இந்த பதவியில் இருக்கும் வரை தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்கக்கூடாது என்றும், அரசு விழாக்களின் போது தனது புத்தகங்களை அன்பளிப்பாக தரக்கூடாது என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டார். தலைமைச் செயலராக 2 ஆண்டுகளை நிறைவு செய்து கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார் இறையன்பு.
அர்ப்பணிப்பு, நேர்மை, களப்பணியில் செயல் வீரர் எனப் பெயர் பெற்ற இறையன்புவை விட்டுவிடக்கூடாது என்று நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது ஓய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பதவியான தலைமை செயலருக்கு நிகரான அந்தஸ்துள்ள தலைமை தகவல் ஆணையர் பதவி கொடுக்க நினைத்தார். ஆனால், இறையன்புவோ ஓய்வு பெற்ற பிறகு எந்த பதவியும் வகிக்கக் கூடாது என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்து, அரசு தர முன் வந்த பதவி நீட்டிப்பையே மறுத்தார்.

ஓய்வுக்குப் பிறகு சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்றபடி செயல்படுவேன். சமுதாயம் எதை நோக்கி என்னை கொண்டு செல்கிறதோ, அதை நோக்கி எனது பயணம் இருக்கும். மாணவர்கள், இளைஞர்களுடன் என் பயணம் இருக்கும் என்று கூறியிருந்தார் இறையன்பு. அதன்படியே, போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் இறையன்பு. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமான ரோல் மாடலாக திகழ்கிறார் இறையன்பு.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு. மாணவ மாணவிகள், கைவினைப் பொருட்களால் இறையன்புவின் உருவத்தை உருவாக்கி பரிசாக அளித்தனர். மேலும், கேக் வெட்டச் செய்து, குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications