30 நிமிட தூக்கம் போதுமா? ஜப்பானியர் சொல்வது சரியா? என்ன பிரச்சினைகள் வரும்?
சென்னை: ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூக்கத்திற்காகச் செலவிட்டு வருவதாக ஜப்பானியர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அது எவ்வளவு உடல்நலத்திற்கு கேடான பழக்கம் என்பது பற்றி இதய மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
வேலை செய்வதில் தேனீக்களைப் போன்ற சுறுசுறுப்பானவர்கள் ஜப்பானியர்கள் என்று புத்தகத்தில்தான் படித்திருக்கிறோம். ஆனால், இப்போது அப்படி ஒருவரை உலகம் நேரில் கண்டு வியக்க ஆரம்பித்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்முனைவோர் டெய்சுகே ஹோரி. இவர் தினமும் 30 நிமிடங்கள்தான் தூக்கத்திற்காகச் செலவிட்டு வருகிறாராம். மற்ற நேரங்கள் எல்லாம் உழைப்புதான். அதன்பிறகு உடற்பயிற்சி. இப்படி வாழ்ந்து வரும் இவர் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையில் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பதை கற்றுத் தருவதற்காக ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி சங்கத்தை நிறுவி இருக்கிறார்.

இந்த ஜப்பானியர் தினம் 30 நிமிடங்கள் தூங்குவதற்கு ஏற்ப தனது உடல்நிலையை அவர் தகவமைத்துக் கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார். வழக்கமாக எழும் நேரத்திற்கு அரை மணிநேரம் முன்பாக எழுந்து விட்டாலே, இன்று சரியாகவே தூங்கவே இல்லை என்று புலம்பும் இளைஞர்கள் மத்தியில் ஜப்பானியர் இப்படிச் சொன்னது பலரையும் வியக்க வைத்துள்ளது.
உலகம் முழுக்க உள்ள மருத்துவர்கள் தினமும் 8 மணிநேரம் தூக்கம் கட்டாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் இப்படி ஒரு முழக்கத்தை முன்வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம்? 30 நிமிட தூக்கம் போதுமா ஒரு மனிதனுக்கு. இது பற்றிப் பேசிய இதயவியல் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம், "இந்தச் செய்திதான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது, அதை நானும் படித்தேன். வழக்கமாக நாம் ஒருநாளைக்கு 12 மணிநேரம் வேலை பார்க்கிறோம். ஆனால், அவர் 30 நிமிடங்கள்தான் தூங்குவதற்குச் செலவிடுகிறேன் என்கிறார். மீதி நேரத்தை உழைக்கவும் உடற்பயிற்சி செய்யவும் செலவிடுகிறேன் என்கிறார்.
இது சாத்தியம்? அதற்கு அந்த ஜப்பான் தொழில்முனைவோர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? மதியம் சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக Caffeine அதிகம் எடுத்துக் கொள்வாராம். அதனால் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் இப்படி சொல்லிவிட்டார் என்பதால், உடனே நீங்களும் அதை முயற்சி செய்து பார்க்கவேண்டாம். அது பல வித விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நம் உடலில் ஒரு சுழற்சி முறை இருக்கிறது. அதன்படிதான் நாம் வாழ வேண்டும். ஒரு உறுப்பு 24 மணிநேரமும் வேலை செய்யக்கூடாது. அதற்கு ஓய்வு தேவை. நாம் உணவு ஆரோக்கியம் பற்றி பேசுகிறோம். உடற்பயிற்சி பற்றி பேசுகிறோம். ஆனால், தூக்கம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஒரு மனிதன் ஒருநாளைக்குக் குறைந்தது 7 மணிநேரமாவது தூங்க வேண்டும். அது கட்டாயம். மீறி தூங்காமலிருந்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். தூக்கம் இன்மையால் கோபம், எரிச்சல் உண்டாகி ஒரு மன அழுத்தம் ஏற்படும்” என்கிறார்.
இவர் Caffeine குடிப்பதால் உற்சாகம் வருமா? அதனால் சுறுசுறுப்பாகத் தூங்காமல் இருக்க முடியுமா? என்பது பற்றிய விளக்கத்தையும் அளித்துள்ளார். தொடர்ந்து இவர் பேசுகையில், “நாம் ஒருநாளைக்கு எவ்வளவு காஃபி குடிக்கலாம்? அல்லது டீ குடிக்கலாம் என்று ஒரு வரையறை உள்ளது. அந்த வரம்பு தாண்டக்கூடாது. Caffeine என்பதை நாம் உட்கொள்ளும்போது ஒரு உற்சாகம் வருவது இயற்கைதான். ஒருவர் ஒருநாளைக்கு 3 காஃபி குடிக்கலாம். அதுதான் லிமிட். அதன் மேல் குடித்தால் ஒரு பதற்றம் வரும். நாம் வேலைகளை வேகமாகச் செய்வோம். இன்னும் சொல்லப் போனால் இதனால் தூக்கம் கெடும்.
இந்தியர்களுக்கு ஏற்கெனவே இதய நோய்ப் பாதிப்பு அதிகம் வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 40 வயதுக்குக் குறைவான பலபேருக்கு நான் இதய அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறேன். எனவே தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் அவசியம். அதை வயது காரணம் காட்டி தள்ளிப் போடக் கூடாது. அது இதய பிரச்சினைகளை உண்டாக்கும். ஏற்கெனவே உணவுப் பழக்கங்கள், லைஃப் ஸ்டைல் மாற்றம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். எனவே ஒரு நாளைக்கு 7 மணிநேரம் தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் அவசியம்” என்கிறார்.












Click it and Unblock the Notifications