விஜய்யை விட அஜித் புத்திசாலி? சீமான் ஏன் விஜய்யை தேடுகிறார்?: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாட்டையடி
சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக ஒரு கட்சி தொடங்குவதற்கான நிலைமை ஏன் வந்தது என்பதை விஜய் விளக்க வேண்டும் என்றும் சின்ன வட்டத்திற்குள் அவர் சிக்கிக் கொண்டுள்ளார் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை அருகே நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அளித்த புஸ்ஸி ஆனந்த், 'அனுமதி கிடைத்ததும் மாநாட்டு தேதியை விஜய் அறிவிப்பார்' என்று கூறியிருக்கிறார். இந்த மாதம் கொடி அறிமுகம், அடுத்த மாதம் மாநாடு என விஜய் அடுத்தடுத்து வேகம் எடுத்துள்ளார். கட்சிக் கொடி அறிவித்த உடனேயே அது தொடர்பாக சில சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக யானை சின்னம் கொடியில் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி அதனை நீக்கக் கோரிக்கை வைத்துள்ள விசயம் அனைவரும் அறிந்ததுதான். மாநாட்டுத் திடலுக்கு தனது தொண்டர்கள் கொடியுடன் வரவேண்டும் என்பதற்காகவே முன்னதாகவே கொடியை அறிவித்திருந்தார் விஜய். கூடவே மாநாட்டுப் பந்தலில் கட்சி பாடல் ஒலிக்க வேண்டும் என்பதால் கொள்கை விளக்கப் பாடலும் முன்னதாக வெளியிடப்பட்டது.
அந்தப் பாடலில் அவர் அண்ணா, எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டது கூட ஒரு பக்கம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா ஆற்றல் மிக்க பேச்சாளர். அரசியல் மேடைகளில் அழகு தமிழை விளையாட விட்டவர். எம்.ஜி.ஆர் உதவியால் திமுகவுக்கு வளர்ச்சி என அண்ணாவே ஒப்புக் கொள்ளும் அளவுக்குச் செல்வாக்கு மிக்க நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். இதை எல்லாம் உணர்ந்து கொள்ளாமல் மூன்று இஷினியல் கொண்ட எம்.ஜி.ஆரையும் மூன்று எழுத்தில் உள்ள அண்ணாவையும் தன்னுடன் சேர்த்து விஜய் பாட்டு எழுத வைத்தது சரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதே ஏன் என்று புரியவில்லை என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் விஜய்யை விளாசி இருக்கிறார். இளங்கோவன் பேசுகையில், "தனியாக தேர்தலில் போட்டியிட்டால் இனிமேல் பலம் இல்லை என்பதைச் சீமான் உணர்ந்துகொண்டதால், இப்போது பல கட்சிகளுக்கு வலை விரிக்கின்றார். இன்னும் முழுமையாக தொடங்கப்படாமல், கொடியை மட்டுமே அறிவித்துவிட்டு, கொடிக்கு விளக்கம் என்ன? என்ன கொள்கை என்பதைக் கூட அறிவிக்காமல் இருக்கும் விஜய்யுடன் கூட்டணி சேர துடிக்கின்றார்.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய். அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருளாதார ஏற்ற தாழ்வுகளை அகற்ற வேண்டும், சோஷலிச கொள்ளைகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி 1925இல் சிங்கார வேலரால் தொடங்கப்பட்டது. அதேபோன்று நான்கு மாநிலங்களை ஒன்று திரட்டி திராவிட நாடு பெற வேண்டும் என்பதற்காக 1949இல் அண்ணாதுரையால் திமுக தொடங்கப்பட்டது. நாட்டுக்கு வெள்ளைக்காரனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இப்படிப் பல கட்சிகளுக்குப் பின்னால் மிகப்பெரிய லட்சியம், கொள்கை இருக்கிறது. விஜய் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

நடிகர் விஜய்யை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று சொந்தம் கொண்டாடக்கூடிய அளவுக்குப் புகழ்பெற்றுள்ளார். அந்த நிலையை தவறவிட்டுவிட்டு, தன்னை சுற்றி ஒரு சிறு கூட்டத்தைப் போட்டுக் கொண்டு நிற்கின்றார். கொடியை அறிவித்துவிட்டு, அதன் விளக்கத்தை மாநாட்டில் சொல்கிறேன் என்கிறார். அதை அறிவிக்கும் அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டுமா? கொடி என்பது சும்மா அலங்கார பொருள் கிடையாது. இந்த விசயத்தில் மிகவும் புத்திசாலி ரஜினிகாந்த் தான். கட்சி ஆரம்பிப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்திற்கு யதார்த்தம் உணர்ந்து அரசியல் வேண்டாம் என்று அறிவித்தார்.
விஜய்க்கு இப்போதுதான் 50 வயதாகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்கலாம். அவருக்கு 200 கோடி சம்பளம் என்கிறார்கள். அதை வைத்து நன்றாக வாழலாம். அதில் சில கோடிகளை தான தர்மம் செய்யலாம். அதுவே சேவைதானே? அதைவிட்டு விட்டு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? சினிமாவில் புகழ் கிடைத்துவிட்டது. அடுத்து பதவி நாற்காலியில் உட்கார வேண்டும் என்று பலருக்கும் வரும் ஆசைபோன்று இவருக்கும் வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
என்னைக் கேட்டால் விஜய் அரசியலுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். அவர் அனைவருக்குமானவர். ஒரு கட்சிக்குள் சுருங்கவேண்டாம். எம்.ஜி,ஆர் கட்சி ஆரம்பித்தார் என்றால், அவர் 1952இல் இருந்தே திமுகவிலிருந்தவர். 'நாடோடி மன்னன்' ஓபனிங் சீனில் திமுக கொடி பறக்கும். 20 ஆண்டுகள் திமுகவில் தொடர்ந்த அவர் அதன்பிறகே அதிமுகவை தொடங்கினார். இந்த விசயத்தில் அஜித் புத்திசாலித்தனமாக இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு விஜய்யைக்கூட நேரடியாகத் தெரியும்.

ஆனால், அஜித்துடன் எனக்குப் பழக்கமே இல்லை. அஜித் தான் ஒரு நடிகர் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆகவே எனக்கு ரசிகர் மன்றம் கூட தேவையில்லை என்று சொல்லிக் கலைத்துவிட்டார். அந்தச் சாமர்த்தியம் விஜய்யிடம் இல்லை. விஜய்க்கு அரசியல் ஈடுபாடு இருந்திருந்தால், ஆரம்பக் காலத்திலிருந்தே அதை அவர் ஒரு வேலையாகச் செய்து வந்திருக்கவேண்டும். இப்படி திடீரென்று வரக் கூடாது.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் முதலில் கிராமம் கிராமாகப் போய் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டும். கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைச் செய்தாரா விஜய்? செய்வாரா விஜய்? அரசியல் கட்சியை தொடங்கிய உடனேயே எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications