ஒரு பக்கம் திருமா - விஜய்.. இன்னொரு பக்கம் ராமதாஸுடன் மேடையை பகிரும் ஸ்டாலின்? என்னங்க நடக்குது?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் ஒரே மேடையில் ஏறுவார்களா? என்கிற கேள்வி இரண்டு கட்சிகளிடமும் கடந்த 2 நாட்களாக எதிரொலித்தபடி இருக்கிறது. டிசம்பர் 6-ந்தேதி ஒரே மேடையில் திருமாவளவனும் விஜய்யும் மேடை ஏறுவார்களா? என்ற கேள்வி கடந்த 3 வாரங்களாக தமிழக அரசியலில் ஹாட்டாக எதிரொலித்ததற்கு கொஞ்சமும் சூடு குறையாத அளவுக்கு ஸ்டாலின் ராமதாஸ் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வார்களா? என்பதும் கேட்கப்பட்டு வருகிறது.
1980-களில் ராமதாஸ் தலைமையில் நடந்த இட ஒதுக்கீடு சாலை மறியல் போராட்டத்தின் போது தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாமகவை சேர்ந்த வன்னியர் சமூகத்தினர் 21 பேர் பலியானார்கள். இவர்கள் இட ஒதுக்கீடு தியாகியாகப் இப்போதும் போற்றப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்காக, நினைவு மணி மண்டபத்தை திமுக அரசு அமைத்துள்ளது. அந்த மணி மண்டபத்தை 29-ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாசை அழைக்க வேண்டும் (அரசியல் மற்றும் தேர்தல் கால காரணங்களுக்காக) என்று ஸ்டாலினிடம் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்கு ஸ்டாலின், திமுக கூட்டணியில் திருமாவளவன் இருக்கும் போது அவருக்கு நேர் எதிரி என சொல்லப்படும் ராமதாசை அரசின் நிகழ்ச்சிக்கு எப்படி அழைப்பது? கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார். ராமதாசை அழைக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள், நம் கூட்டணியில் இருந்து வரும் திருமாவளவன், திமுகதான் எங்களின் அரசியல் எதிரி என்று சொல்லி வரும் நடிகர் விஜய் இருக்கும் மேடையில் திருமா கலந்துகொள்கிறார்.
கூட்டணிக்கான நாகரீகத்தை அவர் கவலைப்படாதபோது அந்த நாகரீகத்தை நாம் கடைபிடிக்கலாமா? அதனால், வன்னியர் சமூகத்திற்கான ஒரு அரசு நிகழ்ச்சியில் பாமக நிறுவனரை அழைப்பது அரசியலாகாது? ஒருவேளை அரசியலானாலும் ஆகட்டுமே என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில், ராமதாசை அழைப்பதா? வேண்டாமா? என்கிற ஆலோசனையில் இருந்து வருகிறது திமுக தலைமை. இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ''விழாவுக்கு ராமதாசை அழைக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தது உண்மை. தலைவரோ (ஸ்டாலின்) அதனை தவிர்க்கவே விரும்புகிறார்'' என்கின்றனர்.
விஜய் திருமா: இன்னொரு பக்கம் விஜயால் வந்த மோதல்: உள்கட்சி நெருக்கடிகளாலும் திமுகவின் அழுத்தங்களாலும் இரண்டு பக்க இடிகளை எதிர்கொண்டு வருகிறார் திருமாவளவன் என்கிறார்கள் வி.சி.க. நிர்வாகிகள். பிரபல பத்திரிகை குழுமமும் வி.சி.க. வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு இணைந்து அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை டிசம்பர் 6-ந்தேதி வெளியிடுகின்றன.
இந்த நிகழ்வில் த.வெ.க. தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட அதனை பெற்றுக்கொள்கிறார் திருமாவளவன். திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பகிர்ந்துகொள்ளவிருப்பதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல ; ஒட்டுமொத்த திமுக தலைவர்களும் இதில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இந்த அதிருப்திதான், புதுசு புதுசாக வர்றவனெல்லாம் திமுகவை அழிக்க நினைக்கிறானுங்க. அதெல்லாம் முடியாது என்று கோபத்தை வெளிப்படுத்தினார். விஜய்யை மனதில் நிறுத்தியே இந்த கோபத்தை காட்டினார் ஸ்டாலின்.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, விஜய்யை ஸ்டாலின் நேரடியாக தாக்கினால், முதல்வரும் கூட்டணிக்கட்சியின் தலைவருமான ஸ்டாலினே தாக்கும் விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்வதை திருமா தவிர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பில் வெளிப்பட கோபம் அது. ஆனால், திருமாவோ, முதல்வரின் கோபத்தில் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து, திமுக கூட்டணியில் நீடிப்போம் என சொன்னார்.
ஆனால், விஜய்யுடன் ஒரே மேடையில் இருப்பதை தவிர்க்க நினைக்கவில்லை. இது திமுகவை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது. திமுகவுக்கும் விசிகவுக்குமான அரசியலை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவிடம், திருமாவின் அரசியல் வேறு மாதிரி இருக்கும் போல ! அந்த பையனோடு (விஜய்) நெருக்கம் காட்டுவதற்காக நம்மளை உரசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications