6 "புள்ளிகள்" யார்.. மேயர் பதவிக்கு வெச்ச குறி.. முக்கிய இடங்களில் திமிறி எழும் திமுக.. பரபர களம்
அதிமுகவை முந்திக் கொண்டு திமுக தேர்தல் வியூகம் அமைத்து வருகிறது
சென்னை: இந்த முறை தேர்தலில் மேயர் பதவியை எட்டிப்பிடிக்க திமுக படுமும்முரமாக வேலை பார்த்து வருகிறது.. அதிலும் மேயர் பதவிக்கு குறி வைத்து சில முக்கிய புள்ளிகள், படுநாசூக்காக காய் நகர்த்தி வருகின்றனராம்..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், இப்போதே பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.. இதில் சென்னை, கோவை, திருச்சி உட்பட யார் மேயராக உட்கார போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த மேயர் பதவிகளை பிடிக்க, திமுக, அதிமுக கட்சிகளில் பலத்த போட்டி நிலவுகிறது... மாநகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, மறைமுக தேர்தல் மூலம்தான் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர்..

வேட்பாளர்கள்
அதனால், மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சிகள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், இவருக்குத்தான் வாய்ப்பு என்று கட்சியினர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.. இதில் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இதனால், மேயர் கனவிலிருந்த தலைமைக்கு நெருக்கமான சிலர் வருத்தத்தில் இருக்கிறார்களாம்..

பெண் கவுன்சிலர்கள்
எனினும் மறைமுக தேர்தல் மூலமே மேயர் தேர்தல் நடத்தப்படுவதால், அமைச்சர்களை மாற்றுவதுபோல நினைத்த நேரத்தில் பெண் கவுன்சிலர்களில் யாரை வேண்டுமானாலும் மேயர் பதவிக்கு மாற்றிக்கொள்ள தலைமைக்கு வசதியாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் ஒரு கணக்கு போடப்பட்டு வருகிறதாம்... அந்த வகையில் சென்னையில் யார் மேயர் என்ற எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்கிறது.

சென்னை மேயர் யார்?
சென்னைக்கு அடுத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக திகழ்கிறது மதுரை.. இந்த மாநகராட்சியின் மேயர் பதவியை பிடிக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்தே, திமுக அதிமுகவுக்குள் கடும் போட்டி இருந்து வருகிறது... எனினும், திமுகவே அதிக முறை மேயர் பதவியை பிடித்துள்ளது... இப்போது மதுரை மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவில் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது... யார், அதிகமான வார்டுகளை வெற்றிபெற வைக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.. அதனால்தான், திமுக தரப்பினர் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு நேரடியாக குறி வைக்காமல், கவுன்சிலர் தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்ற வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அடுத்ததாக திருச்சியை எடுத்து கொண்டால், இதுவரை பெண்கள் மட்டுமே இங்கு மேயராக இருந்துள்ளனர். மேயர் பதவிக்கு அக்கட்சியின் மாநகர செயலாளர், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதில், அமைச்சர் நேருவின் நேரடி ஆதரவாளர்தான் அன்பழகன்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நேரடி ஆதரவாளர்தான் மதிவாணன்.. இதனால் திருச்சியில் டென்ஷன் எகிறி கொண்டிருக்கிறது.

திமுக ஆதரவு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற உள்ள தேர்தல், நகர் முழுதும் பரபரப்பை கூட்டிக் கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு வார்டிலும், வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... பெருநகராட்சியாக இருந்த காஞ்சிபுரம், மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது.. எனவே, இதன் முதல் மேயராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. திமுக ஆதரவு நிறைய உள்ளதால், எப்படியும் காஞ்சிபுரம் மாநகராட்சியையும் ஆளும் தரப்பே வாரிசுருட்டிக் கொள்ளும் என்கிறார்கள்.

கவுன்சிலர்கள்
இதற்கு நடுவில் மேயர் பதவிக்கு குறி வைத்து சில புள்ளிகள் இப்போதே காய் நகர்த்தி வருகிறார்களாம்.. மேயர் பதவியை பிடிக்க எப்படியும் 26 கவுன்சிலர்களாவது தேவைப்படும்.. அதனால், கவுன்சிலர்களுக்கு தேவையானதை செய்ய இந்த புள்ளிகள் தயாராகவே இருக்கிறார்களாம்.. அதிலும் 6 பேர் மேயர் பதவியை பிடிக்கும் போட்டியில் உள்ளதாகவும், இவர்களுக்கு கட்சி மேலிடம் ஓகே சொல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.. 6 நிர்வாகிகளுமே பசையுள்ள நபர்களாம்.. இவர்களில் எப்படியும் ஒருவராவது மேயர் பதவியை எட்டிப்பிடித்து விடுவார் என்கிறார்கள்.. ஆக மொத்தம், தேர்தல் களம் தமிழகமெங்கும் அனலடித்து கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications