மோடிக்கு புகழாரம்- வலையில் சிக்கிய செங்கோட்டையன்.. அதிமுக கட்சி பதவிகளை பறிக்கும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளரான கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறிக்கும் அறிவிப்பு அந்த நேரத்திலும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்பது இல்லை; சட்டசபையிலும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இணைந்து வெளிநடப்பு செய்வது இல்லை; அத்துடன் அதிமுக எந்த சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதோ அந்த சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து ஆலோசனையும் நடத்தினார் செங்கோட்டையன்.

இதனால் கடுப்பாகிப் போன எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஏன் இப்படி புறக்கணிக்கிறார் என அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என பத்திரிகையாளர்களிடம் அதிருப்தியை கொட்டினார். அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைகள் அநாகரீகமானது என்றார்.
இது ஒருபுறம் இருக்க, பிரதமர் நரேந்திர மோடியை வானளாவ புகழ்ந்து பேசினார் செங்கோட்டையன். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன் இப்படி பேசியது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளதாம். கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை பாஜக தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடியை செங்கோட்டையன் இப்படி பாராட்டிப் பேசிய பின்னரும் எப்படி பொறுமையாக இருக்க முடியும்? என எடப்பாடி பழனிசாமியிடம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோபத்தை கொட்டி இருக்கின்றனர்.
இதனையடுத்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி. இதன் முதல் கட்டமாக செங்கோட்டையனின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி ஆகியவை பறிக்கப்பட உள்ளதாம். இந்த இரு பதவிகளையும் பறித்த உடனேயே செங்கோட்டையனை எதிர்க்கக் கூடிய வலிமையான ஒருவரை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்தும் அறிவிப்பு வெளியிட இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அறிவிப்புகள் எந்த நேரத்திலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியாகலாம் என்கிற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications