சிக்னல்! தப்பிச்சிட்டாரே ‘சீனியர்’.. 42000 ஓட்டு பறிபோச்சே.. துணிந்து வரும் எடப்பாடி.. அதிரும் பாஜக!
செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு மறைமுகமாக எதிர்ப்பைக் காட்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டியும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. பாஜகவை நேரடியாக எதிர்ப்பதற்கு செங்கோட்டையன் மூலம் விதை போட்டுள்ளாரா எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் 42 ஆயிரம் சிறுபான்மையின வாக்காளர்கள் பறிபோனதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் தலைமையின் கருத்துக்கு எதிராக சிறு முணுமுணுப்பு கூட அதிமுகவில் எழாது. ஒருவேளை யாரோ, எங்காவது பேசியிருந்தாலும், உடனடியாக அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் தூக்கியடிக்கப்படுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு அந்த நிலை இல்லை என்றாலும், கூட்டணி கட்சிகளை விமர்சித்துப் பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் பார்த்துள்ளோம்.

கேசிபி நீக்கம்
கடந்த 2018-ல் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்.பி.க்கள் ஆதரிப்பார்கள் என்கிற ரீதியில் தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார் கே.சி.பழனிசாமி. கேசி பழனிசாமி, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை நேரடியாக மிரட்டுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கே.சி.பழனிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர்.

புகழேந்தி நீக்கம்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுப் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களுர் புகழேந்தி. அதற்கு முக்கிய காரணம், கூட்டணியில் இருந்த பாமகவை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதே. தேர்தல் தோல்விக்கு பிறகு மற்றவர்களை விமர்சிப்பதே பாமகவின் வாடிக்கை. அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் பாமகவுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி ராமதாஸ் இன்று ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்று பேசினார் புகழேந்தி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அன்வர்ராஜா நீக்கம்
அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா 2021 டிசம்பரில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பாஜக உடனான கூட்டணியை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர்ராஜா, முத்தலாக் மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்தபோது அதை மக்களவையில் ஆதரித்துப் பேசிய ரவீந்திரநாத்தின் நிலைப்பாடு அதிமுகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல என்று பேசினார். மேலும், அதிமுக வலுவில்லாமல் இருப்பதால் கட்சியை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றும் பேசியது பெரும் விவாதமான நிலையில், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

செங்கோட்டையன்
இந்நிலையில், சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு தேர்தல் தோல்விக்கு பாஜகவே காரணம் என்கிற ரீதியில் பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் இதுகுறித்துப் பேசிய செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு தொகுதி என்பது முன்பு அதிமுக வெற்றி வாகை சூடிய பகுதி. இன்று 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். இதில் 42 ஆயிரம் பேர் சிறுபான்மையினர். அவர்கள் பாஜக நம்முடன் கூட்டணியில் இருப்பதன் காரணமாக நமக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்தனர் எனப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.

டைரக்ட் அட்டாக்
இப்போது அதிமுகவைச் சேர்ந்த பலர் கூட்டணி கட்சியான பாஜக குறித்து விமர்சித்துப் பேசி வருகின்றனர். அதற்கு பாஜக தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி, சர்ச்சைக்கு காரணமான அதிமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாகவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் 42 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போனது என்று பேசியிருக்கிறார். கூட்டணியில் இருக்கும் பாஜகவை நேரடியாக விமர்சித்திருக்கிறார் செங்கோட்டையன்.

பாஜகவுக்கு ரெட்
எனவே, எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டே, பாஜகவை சீனியர்களை வைத்து சீண்டுவதாக கருத்துகள் எழுந்துள்ளன. பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்கள் மூலம் பாஜகவுக்கு 'ரெட் சிக்னல்' காட்டுகிறார் என்கிறார்கள். பொன்னையன், சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் போன்ற பலர் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பேசியிருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது செங்கோட்டையனும் பாஜக உடனான கூட்டணிக்கு எதிராகப் பேசியுள்ள நிலையில் அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவரது கருத்துக்கும் மறுப்புச் சொல்லப்படவில்லை. இது செங்கோட்டையனின் கருத்தை ஈபிஎஸ் ஏற்பதாகத்தானே அர்த்தம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications