‛குறி தென்காசிக்கு’.. எடப்பாடியை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி! அதிமுக இணையும் புதிய தமிழகம்? பின்னணி
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை வரும் 15ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாகி உள்ளது.

அதேபோல் அதிமுகவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக தனது கூட்டணியில் இருந்த பாஜகவை கழற்றிவிட்டுள்ளது. அதோடு பாஜக இல்லாத கூட்டணியை அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்து வருகிறார்.
மேலும் அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் உள்ளன. தேமுதிகவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரேமலதாவை அதிமுக மாஜி அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் பாஜக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுடன் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. இதனால் கிருஷ்ணசாமி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன், கிருஷ்ணசாமி விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி பரிசீலனை செய்வதாக பாசிட்டிவான பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைப்பது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டது. அப்போதும் தென்காசி தொகுதி புதிய தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. அந்த தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் 4 லட்சத்து 76 ஆயிரத்து 156 ஓட்டுகள் பெற்ற நிலையில் கிருஷ்ணசாமி 3 லட்சத்து 55 ஆயிரத்து 389 ஓட்டுகள் மட்டுமே பெற்று 1,20,767 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் மீண்டும் தென்காசி தொகுதியை அவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications