சனாதன ஒழிப்பு மட்டும் சரியா? மகாவிஷ்ணுக்கு கருத்துரிமை இல்லையா? மதுவந்தி ஆவேசம்
சென்னை: மகாவிஷ்ணு பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று பாஜகவைச் சேர்ந்த மதுவந்தி ஒரு வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசிய கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய அவரை 2 நாட்கள் முன்னதாக காவல்துறையினர் கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து பரம்பொருள் அறக்கட்டளை சார்ந்தவர்கள் மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாகப் பேட்டி அளித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பரம்பொருள் ஃபுண்டேஷன் யூடியூப் தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு பேசிய சர்ச்சையான கருத்துகள் அடங்கிய வீடியோ நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்நிலையில் மகாவிஷ்ணு பேசியதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த மதுவந்தி. அவர் இந்தக் கருத்துகள் சனாதன தர்மத்தில் இருப்பதுதான். அதையே அவர் பேசி இருக்கிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து மதுவந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் அவர், "தமிழ்நாட்டில் கருத்துரிமையே கிடையாது. ஒருவர் தனது கொள்கைகள் பற்றிப் பேசக் கூடாதா? அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி இதுவரைப் பலரை அழைத்து தன்னம்பிக்கை சொற்பொழிவுகளை மாணவர்களுக்காக நடத்தி இருக்கிறார். இது ஒரு நல்ல ஏற்பாடு. அதை நான் ஆதரிக்கிறேன். நான் படிக்கும் போது பள்ளிகளில் ஒழுக்க நெறிகள் பற்றிய நிறைய வகுப்புகள் நடக்கும்.
அதைப்போலத்தான் பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு என்பவர் பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தி இருக்கிறார். அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்தால், அவர் அவரது கருத்துகளைத்தான் பேசுவார். நாம் எழுதிக் கொடுத்ததைப் பேசுவதற்கு? இது மேடை நாடகம் கிடையாது.
அவர் கடவுள் பலரைப் பலவிதமாகப் படைத்துள்ளார். அவர்கள் ஒரேமாதிரி இல்லை. அதற்குக் காரணம், போன ஜென்மத்தில் செய்த கர்ம வினை. ஆகவே நாம் அதை அனுபவிக்கிறோம் என்று பேசி இருக்கிறார். அதுவும் மகாவிஷ்ணுவை முழுமையாகச் சொல்வதற்கு முன்பே ஆசிரியர் சங்கர், இது மூடநம்பிக்கை என்று பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதில் எங்கே மூடநம்பிக்கை வந்தது? கர்மா என்பது சனாதனத்தில் இருக்கிறது. கிறிஸ்துவத்தில் உள்ளது. இஸ்லாத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இது எப்படி மூட நம்பிக்கையாகும்.
இதேபோல ஒரு பள்ளிக்குப் போய் மாணவர்கள் மத்தியில் திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, 'நீங்கள் நீட் தேர்வுக்குப் படித்தால் தற்கொலை செய்து கொள்வீர்கள். ஆகவே, அந்தத் தேர்வுக்கு படிக்காதீங்க?' என்று பேசி இருக்கிறார். இது சரியா? அதற்கு ஏன் அமைச்சர் மறுப்பு சொல்லவில்லை? அதேபோல ஜோ அருண் என்பவர் சமூக அறிவியல் பாடத்தில் ஏசுவின் சித்தாந்தத்தைப் புகுத்தி இருக்கிறேன்.
ஆனால், இது நிறையப் பேருக்குத் தெரியாது என்று பேசி இருக்கிறார். அது சரியா? பள்ளிக்கல்வி அமைச்சருக்கு இது தெரியவில்லையா? நான் எந்த மதத்தையும் சொல்லித் தரவேண்டாம் எனச் சொல்லவில்லை. சங்கராச்சாரியார் பற்றியும் மாணவர்கள் படிக்கலாம். ஏசு, நபிகள் நாயகம், மகாவீர் பற்றியும் மாணவர்கள் படிக்கலாம். எதுவும் தவறு இல்லையே? அதை ஏன் ஒளிவுமறைவாகச் சொல்லித் தரவேண்டும்?
சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துவது கருத்துரிமை என்றால், மகாவிஷ்ணு பேசியதில் என்ன தவறு இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் போய் உட்கார்ந்து இருந்தார். இப்போது முருகனுக்கு மாநாடு நடத்துகிறார். ஒரு வருடத்தில் உங்கள் கொள்கை மாறிவிட்டதா? சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்துவது உங்களின் கருத்துரிமை என்றால், மகாவிஷ்ணு அவரது கருத்தைப் பேசுவதும் கருத்துரிமைதானே? அதை ஏன் தடுக்கிறீர்கள்? அந்தத் தலைமையாசிரியர் என்ன தவறு செய்தார்? அவரை ஏன் மாற்ற வேண்டும்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சாதி மோதல் நடக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த ஏதாவது செய்யுங்கள். நாங்குநேரி விவகாரம் இன்னும் நாற்றம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைச் சரிசெய்ய அமைச்சர் ஏதாவது நடவடிக்கையை இடுங்கச் சொல்லுங்கள். தமிழ் ஆசிரியரை ஆதரிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்றால், மகாவிஷ்ணுவை ஆதரிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆசிரியர் சங்கர் பேசியது கருத்துரிமை என்றால் மகாவிஷ்ணு பேசியதும் கருத்துரிமைதான்" என ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications