திமுக விக்கெட் காலி.. இங்கே ரெய்டு நடந்த கேப்பில்.. டெல்லிக்கு போன புள்ளி.. அமித் ஷா பிளானே இதுதானா?
சென்னை: அமைச்சர் பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கவுதம சிகாமணி நேற்று அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த ரெய்டுக்கும் திமுக எம்பி பாரிவேந்தர் டெல்லி சென்றதற்கும் இடையில் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வருகிறார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.

இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார்.
இதனால் அவர் எங்கே பாஜக பக்கம் தாவ போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது திராவிட இயக்கங்களை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும்.
நான் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தேன். அப்போது 2.40 லட்சம் வாக்குகள் பெற்று வென்றேன். அதன்பின் வேறு கூட்டணிக்கு சென்றேன். நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. நான் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் வென்று இருப்பேன். என்று குறிப்பிட்டார்.
இப்படி திமுகவை கடுமையாக தாக்கி பேசியவர் பாஜக தலைவர்களை அடிக்கடி சந்தித்தார். இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள பாரிவேந்தர் செல்கிறார். இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று பெங்களூரில் நடக்க உள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் கட்டமாக இரவு நேர விருந்து கொடுக்கப்பட்டு விருந்திற்கு இடையே சிறிய அளவிலான ஆலோசனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரி வேந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரி வேந்தரின் ஐஜேகே இணைவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில்தான் பாரி வேந்தர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கள்ளக்குறிச்சி தேர்தலில் பாரி வேந்தரை களமிறக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இதற்கும் நேற்று பொன்முடி வீட்டில் நடந்த ரெய்டும் இடையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் ஐஜேகே பாரிவேந்தர் பாஜக கூட்டணி சார்பாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் அதே தொகுதி எம்பி கவுதம சிகாமணி அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications