அதிமுக என்ற வார்த்தையே இல்லையே.. ஓ இதுக்குத்தான் விஜய் வாய்ஸ் தராமல் இருந்தாரோ.. தடதட தவெக!
சென்னை: அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்டமான கட்சி ஒன்று வரப்போவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். இந்த கட்சி தமிழக வெற்றிக்கழகம்தான் என்று இப்போதே அரசியல் உலகில் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே எந்த விதமான அரசியல் விவகாரங்களிலும் அதிமுக பெயரை விஜய் எடுக்காமல் இருக்கிறார். விமர்சனம் வைக்கும் இடங்கள் எதிலும் அதிமுக என்ற பெயரை சொல்லாமல் தவிர்த்து வருகிறார். உதாரணமாக திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு பின் கஸ்டடி மரணங்கள் பற்றி விஜய் பேசினார். கஸ்டடி மரணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை லிஸ்ட் போட்டார். ஆனால் இதில் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற கஸ்டடி மரணங்கள் எதையும் பற்றி பேசாமல் விஜய் மௌனமாக இருந்தார். கஸ்டடி மரணத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையை கூட விஜய் பயன்படுத்தவில்லை.

அதிமுக வார்த்தையே இல்லையே
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் தான் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். அதோடு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் 2 இழப்பீடு வழங்க நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10-15 லட்சம் வரை 3 இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை பிறப்பிக்கப்பட்டது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் 5 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த குற்றத்தில் அதிமுக மாஜி நிர்வாகி உட்பட 9 பேர் இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர்.
விஜய் அறிக்கை
இந்த நிலையில்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கொடுத்த அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
இதில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையே இல்லை. அதிமுக காலத்தில் நடைபெற்ற குற்றம் ஒன்றில், அதிமுக புள்ளிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் ஈடுபட்டதாக சொல்லப்படும் குற்றம் ஒன்றை பற்றி பேச வேண்டிய விஜய் அதில் அதிமுக என்ற பெயரையே சொல்லாதது பெரிய அளவில் விவாதங்களை சந்தித்தது.
எடப்பாடி பேச்சு
இப்படிப்பட்ட நிலையில்தான் காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கூட்டணி வருதோ?
இதனால் அதிமுக - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி விசாரித்தும் வருகிறாராம். பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகர தொடங்கி உள்ளது. நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று பாஜகவினர் சார்பாக எடப்பாடியிடம் பகிரப்பட்டதாம். இதன் காரணமாகவே எடப்பாடி விரைவில் பிரம்மாண்ட கட்சி தனது கூட்டணிக்கு வரப்போவதாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே விஜயும் அதிமுக பெயரை எடுக்காமல் அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications