"ஹீரோ" மோடி.. முருகன் வைத்த வெடி.. ராசாவை மறந்தாச்சா.. சு.சாமி?.. திமுகவின் சமூக நீதி.. பரபர விவாதம்
சமூக நீதியை திமுக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது
சென்னை: சமூக நீதியை கடைப்பிடிப்பது பாஜகதான் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளது விவாதங்களையும், சலசலப்புகளையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. உண்மையிலேயே திமுக சமூக நீதியை கடைப்பிடிக்கிறதா?
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது.. இந்தகூட்டத்தில், மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது, பாஜக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு சொல்லி கொண்டே வந்தவர், திமுக அரசையும் விமர்சிக்க ஆரம்பித்தார்..

பொய்கள்
வளர்ச்சி மற்றும் சமூக நீதியில் மத்திய அரசு குறித்து பேச திமுக அரசுக்கு உரிமை இல்லை.. திமுக - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் வாக்குகளை பெற்றனர்.. குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கவில்லை இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுகவின் அனைத்து பொய்களையும் இப்போது உணர்ந்து கொண்டனர்.

ஹீரோ பிரதமர்
திமுகவினர் சொல்லும் திராவிட மாடல் என்றால் யாருக்கும் புரியவில்லை... இது ஆன்மீக பூமி, இங்கு திராவிட மாடல் எடுபடாது. சமூக நீதிக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தம் இல்லை... சமூக நீதி பற்றி பேசும் முதல்வர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. இது தான் சமூக நீதியா? சமூகநீதியின் உன்மையான ஹீரோ பிரதமர் மோடி தான்.. மத்திய அமைச்சரவையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கியுள்ளார்." என்று முருகன் இவ்வாறு கூறினார்.

விவாதங்கள்
சமூக நீதி பற்றி பேசும் திமுக, பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கியதா என்று எல்.முருகன் எழுப்பியுள்ள இந்த கேள்வி விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. கடந்த சில வருடங்களுக்கு முன்பும்கூட, எல். முருகன் இதே பிரச்சனையை ஒருமுறை கிளப்பியிருந்தார்.. "திமுகவின் உட்கட்சியில் சத்தியவாணி முத்து முதல் இப்போது ஆ.ராசா வரை பட்டியல் இனத்தவர்கள் முக்கிய பதவிகளுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.. பட்டியல் இனத்தவர்கள் புறக்கணிக்கப்படும் வரலாறு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின்
இப்போதும் இதே சமூக நீதி பிரச்சனை வெடித்துள்ளது.. தன்னை ஒரு சமூகநீதி காவலராக ஸ்டாலின் காட்டிக் கொள்கிறாரே தவிர, திமுக வரலாற்றில் அப்படி இல்லை என்றும் விமர்சனங்கள் குவிந்துள்ளன.. உண்மையிலேயே திமுக, சமூக நீதி வழியில்தான் நடைபோட்டு வருகிறதா? அல்லது பாஜக வேண்டுமென்றே இப்படி கிளப்பிவிட்டு வருகிறதா? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது...

தலித் சத்தியவாணிமுத்து
"அண்ணா ஆட்சி அமைக்கிறார்.. 8 பேர் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் அமைச்சரவை அமைகிறது.. நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த முத்துசாமி, வன்னியர் சமுதாயத்தை கோவிந்தசாமி, இவர்களுடன் தலித்தை சேர்ந்த சத்தியவாணி முத்துவுக்கும் பொறுப்பு தரப்பட்டது.. எடுத்த எடுப்பிலேயே குறுகிய அமைச்சரவையில் இந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தந்தது அண்ணாதான்.. சத்தியவாணி முத்து ஒரே பெண் அமைச்சர் அப்போது.. ரொம்ப வருஷமா அமைச்சராகவே இருந்தவர்.

பரிதி இளம்வழுதி
1989-ல் வைகோ பரிந்துரைத்தார் என்பதற்காக தங்கவேலுக்கு கருணாநிதி பதவி தரவில்லையா? ஏன் பரிதி இளம்வழுதிக்கு மக்கள் தொடர்பு துறை பதவியை தரவில்லையா? அவ்வளவு வேணாம்.. இன்றைக்கு நன்றியை மறந்து பாஜக பக்கம் சாய்ந்துள்ள அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த இதே விபி துரைசாமிக்கு கலைஞர் செய்யாததா? துணை சபாநாயகர் ஆக்கினாரே.. எம்பி ஆக்கினாரே.. காட்டுமன்னார்குடி இளையபெருமாள் காங்கிரஸ் தீவிர கட்சிக்காரர்தான்.. தலித்தான்.. அது ரிசர்வ் தொகுதி என்பதால், அங்கே இளையபெருமாள்தான் எப்போதுமே தேர்தலில் நின்று வெற்றி பெறுவார்.. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்..

சம்பந்தி
ஆனால், "என்னுடைய சம்பந்தி இளையபெருமாள் அவர்களே"... என்று கருணாநதி மேடையிலேயே சொல்வார்.. அப்படி சொல்லும்போது, இளையபெருமாள் விழுந்து விழுந்து சிரித்துவிடுவார்.. கருணாநிதி இப்படி உறவுமுறை சொல்லி யாரையுமே அழைத்து கிடையாது.. இதெல்லாம் வரலாறு இல்லை என்று சொல்லுமா?

ஜனாதிபதி
நாங்க ஒன்னு கேட்கறோம்.. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்து இல்லையா? அப்போ ஏன் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஜனாதிபதியை விழாவுக்கு கூப்பிடல? அவரை நீங்கதானே நியமனம் செய்தீங்க? விழாவுக்கு கூப்பிட்டிருக்கணுமா இல்லையா? அகில இந்திய அளவில் எந்த தலித்துக்காவது பொறுப்பை இவர்கள் தந்திருக்காங்களா? இப்போ வந்த முருகனுக்கு எல்லாம் என்னங்க வரலாறு தெரியும்?

வானதி சீனிவாசன்
எச்.ராஜா வீட்டுக்கு இவர்தானே ஓடிப்போய் ஆசியும், வாழ்த்தும் வாங்கிக்கிட்டார்? பாஜகவின் வானதி சீனிவாசன், நாராயணன், ராகவன், இப்படி யராவது இவரை நேரில் வந்து சந்தித்து இருக்காங்களா? இல்லை மூத்த தலைவர்கள் சிபிஆர், பொன்னார், சு.சாமி போன்றவர்கள்தான் தேடி வந்து பேசியிருக்காங்களா? கருணாநிதியை இந்த விஷயத்தில் ஒரு குறையும் சொல்லவே முடியாது.. உள்ஒதுக்கீடு விஷயத்தில் எவ்வளவு செய்திருப்பார் என்பதை இந்த தமிழகம் அறியும்..

புரட்சிகர ஜனநாயக நடவடிக்கை
அவரை மாதிரி எல்லா கட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்தது யாருமே கிடையாது.. திமுகவின் அதிகார பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினர், மகளிர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் பாராட்டக்கூடியது.. துணை பொதுச்செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர் போன்ற பொறுப்புகளில் தலித் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, பிற கட்சிகளில் பின்பற்றப்படாத ஒரு புரட்சிகர ஜனநாயக நடவடிக்கை" என்றனர்.












Click it and Unblock the Notifications