“பவர்” அறிவிப்பு பட்ஜெட்டில் இருக்குமா? நாடே எதிர்பார்க்குது - திமுக தேர்தல் அறிக்கை நினைவிருக்கா?
சென்னை: தமிழ்நாட்டு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஒரு முக்கிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர். என்ன அது விரைவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்றியமையாத தேவையாக இருப்பது மின்சாரம். இதற்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்வாரியம் நிர்ணயித்து வசூலித்து வருகின்றது. அதன்படி வீட்டு மின் உபயோகத்திற்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

ஒரு வீட்டில் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் உள்ள 101 - 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கான கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும். 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் உயரும். எனவே அவர்கள் முதல் 100 யுனிட்டுகள் இலவசம், 101 - 200 யூனிட்டுகளுக்கு வரையிலான மின் கட்டணத்துக்கும் அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, 200 - 500 யூனிட் வரை நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50ஆக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால் 101 - 200 யூனிட்டுகளுக்கு ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். அதையும் தாண்டி பயன்படுத்தினால் அதற்கு ஏற்ப மொத்தமாக மின் கட்டணம் இரட்டிப்பாகிவிடும். நாளாக நாளாக வட்டி போன்று மின் கட்டணமும் பன் மடங்காகிவிடும். தற்போது தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் பயன்பாட்டு அளவு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் 2 மாதத்தின் மின் பயன்பாட்டு அளவு பன்மடங்கு அதிகரித்து கூடுதல் கட்டணத்தை மக்கள் செலுத்தும் நிலை உள்ளது. அதிலும் பல பகுதிகளில் 60 நாட்களை தாண்டி மின் பயன்பாட்டு அளவை குறிப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் வருவதால் மக்கள் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. இதனை தவிர்க்க மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறையை கொண்டு வந்தால் மின் பயன்பாடு அதிகரிக்காமல் மக்கள் குறைவான கட்டணத்தை மின்சாரத்துக்காக செலுத்தும் நிலை வரும்.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த தேர்தல் அறிக்கையில், மாதாந்திர மின் கணக்கெடுப்பு முறை கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இணையாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னும் அதை அரசு நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்த பட்ஜெட்டை மின் துறையை கையில் வைத்திருக்கும் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் நிலையில் இந்த ஆண்டிலாவது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications