செல்லாததாகிறதா உங்கள் கிரயப் பத்திரம்? தமிழக பதிவுத்துறையில் திடீர் மாற்றம், அதென்ன கூட்டு மதிப்பு
சென்னை: தமிழகத்தில் வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு பேரிடியாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு பல இடங்களில் ஸ்தம்பித்து போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய வீடுகளை வாங்குவோர், தங்கள் பெயருக்குப் பத்திரங்களை மாற்ற முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.. இது உண்மையா?
தமிழகத்தில் பொதுவாக நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை சர்வே எண் வாரியாக பதிவுத் துறை நிர்ணயிக்கும்., கடந்த காலங்களில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை செய்யப்படும்போது நிலத்தின் பங்கிற்கு ஒரு பத்திரமும், கட்டுமான மதிப்பிற்கு மற்றுமொரு பத்திரமும் என இரண்டு வெவ்வேறு முறைகளில் பதிவு செய்யப்பட்டு வந்தன.

வெளிப்படைத்தன்மை
இந்த நடைமுறையை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் தமிழக அரசு கடந்த 2023ம் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு புதிய அதிரடித் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி, நிலம் மற்றும் கட்டடம் ஆகிய இரண்டையும் இணைத்து "கூட்டு மதிப்பு" என்ற ஒற்றை மதிப்பின் அடிப்படையில் ஒரே பத்திரமாகப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்திற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள தெருக்கள் வகைப்படுத்தப்பட்டு, ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் தெரு வாரியாகக் கூட்டு மதிப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
தமிழக பதிவுத்துறை
எனினும், இதில் தற்போது நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.. அதாவது, இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளே இல்லாத, இப்போதுதான் புதிதாக அந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள பல பகுதிகள் இந்தக் கூட்டு மதிப்புப் பட்டியலில் விடுபட்டுப் போயுள்ளனவாம்..
இப்போது இந்தப் பகுதிகளில் டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து ஆர்வத்துடன் வீடுகளை முன்பதிவு செய்த பொதுமக்கள், இறுதிக்கட்டமாகப் பத்திரப்பதிவு செய்ய செல்லும்போதுதான் அந்த பகுதிக்கு "கூட்டு மதிப்பு" இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும், கூட்டு மதிப்பு இல்லாத காரணத்தால், அந்தப் பகுதிகளில் பத்திரப்பதிவு செய்யச் சார்-பதிவாளர்கள் மறுப்பதாகவும் புகார்கள் முளைத்துள்ளன.
பத்திரப்பதிவு
இது குறித்து இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் (BAI) தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டாலும், விடுபட்ட பகுதிகளில் தற்போதுதான் பெரிய அளவிலான அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆர்வத்துடன் வீடு வாங்க முன்வந்தாலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் பத்திரப்பதிவு முடங்கியுள்ளது. இது தொடர்பாகக் கீழ்நிலை அதிகாரிகளிடம் முறையிட்டால், மேலதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைவிரிக்கிறார்களாம்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
பதிவுத் துறை தலைமை அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் வீடு வாங்குவோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது...
இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக, தமிழக பதிவுத் துறை விடுபட்ட பகுதிகளில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் தாமதமின்றி கூட்டு மதிப்பை நிர்ணயம் செய்ய சிறப்பு நிலைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..
கூட்டு மதிப்பு
இதன்மூலம் கட்டுமானத் திட்ட அனுமதி பெற்ற பகுதிகளில் நிலவும் தற்போதைய சந்தை மதிப்பை ஆய்வு செய்து, அந்தத் தரவுகளை உடனடியாக வெப்சைட்களில் பதிவேற்றுவதன் மூலம் சார்-பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான முட்டுக்கட்டையை நீக்க முடியும் என்று நம்பப்படுகிறது..
மேலும், கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும் வரை தற்காலிகமாக பழைய நடைமுறையிலேயே பதிவு செய்ய அனுமதிப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுபட்ட இடங்களைப் பட்டியலில் சேர்ப்பது போன்ற நிர்வாக ரீதியான துரித நடவடிக்கைகள் மட்டுமே வீடு வாங்குவோரின் தவிப்பையும், கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையையும் போக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications