ISRO Gaganyaan test: சென்னை துறைமுகத்திற்கு வந்த ககன்யான் கேப்சூல்.. முக்கிய சோதனையை அசால்ட்டாக செய்து முடித்த இஸ்ரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டம்தான் ககன்யான். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க பல கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த திட்டத்தின் 'ககன்யான் ஒருங்கிணைந்த விமானச் சோதனை' வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சோதனை வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ISRO Gaganyaan

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அருகே, வங்காள விரிகுடாவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் கேப்சூல் பாதுகாப்பாகவும் சீராகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பாராசூட்களை சரிபார்க்க இந்த சோதனை நடத்தப்பட்டது.

ககன்யான் ஒருங்கிணைந்த விமானச் சோதனை என்பது என்ன?

இந்த சோதனையில், இந்திய விமானப்படையின் போயிங் CH-47 சினூக் ரக ஹெலிகாப்டர் 4,000-4,500 கிலோ எடையுள்ள ககன்யான் விண்வெளி கேப்சூலை சுமந்து சென்றது. இந்த ஹெலிகாப்டர், கேப்சூலை சுமார் 4,000 மீட்டர் (4 கி.மீ) உயரத்திற்கு எடுத்துச் சென்று, பின்னர் கடலில் விட்டது. விண்வெளி வீரர்கள் இப்படித்தான் தரையிறங்குவார்கள். இந்த கேப்சூல் தனது வேகத்தை குறைக்க பாராசூட்டை பயன்படுத்தும்.

சோதனையின் போது, கேப்சூல் வேகமாகத் பாராசூட்களைப் பயன்படுத்தி வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாகக் கடலில் இறங்கியது. ஸ்கைடைவிங் போலவே, பாராசூட்கள் பயன்படுத்தப்படும்போது, வேகம் கட்டுப்படுத்தப்பட்டு குறைகிறது. ககன்யான் கேப்சூலில் பொருத்தப்பட்டுள்ள பாராசூட்கள் மற்றும் அது தொடர்பான அமைப்புகளின் பயன்பாட்டை இந்த சோதனை உறுதிப்படுத்தியது. இதில் ஒரு பாராசூட் இல்லாமல் 3 பாராசூட்கள் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் கேப்சூல் விண்வெளியில் இருந்து திரும்பும்போது, தொடர்ச்சியான பாராசூட்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகக் கடலில் தரையிறங்குவது மிக முக்கியமானது. கேப்சூல் சுமார் 4,000-5,000 கிலோ வரை எடையிருக்கும். இந்த எடையின் வேகத்தை பாராசூட் எப்படி கட்டுப்படுத்துகிறது? என்பது இந்த சோதனையில் சோதித்து பார்க்கப்பட்டது.

கேப்சூல் பாதுகாப்பாகக் கடலில் தரையிறங்கியதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கடற்படையின் கப்பல்கள் தங்கள் சிறிய படகுகளைப் பயன்படுத்தி கேப்சூலை அணுகி, ஆய்வு செய்து, கப்பலில் உள்ள கிரேன் மூலம் அதைக் கப்பலின் தளத்தில் பாதுகாப்பாக கொண்டு வந்தன. இந்தியக் கடற்படைக் கப்பலான அன்வேஷ், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கேப்சூலை மீட்டெடுத்து இந்த நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியது. காலை 7 மணிக்க ஹெலிகாப்டர் கேப்சூலை கடலில் விட்டது. இதனை மீட்டு மதியத்திற்குள், சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த செயல்பாடு இஸ்ரோ, கடற்படை மற்றும் விமானப்படையின் மூலம் வான் மற்றும் கடல் வழியாகக் கண்காணிக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கான பாராசூட்கள் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மூலம் உருவாக்கப்பட்டவையாகும்.

ககன்யான் தொடர்பான ஆயிரக்கணக்கான சோதனைகளில் IADT ஒன்றாகும்.

ககன்யான் திட்டத்தை வெற்றி பெற செய்ய மின்சாரம், இயந்திரவியல், ரசாயனம், மென்பொருள், வழிகாட்டுதல், ஆட்டோமேஷன் போன்ற பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் ஆயிரக்கணக்கான சோதனைகளை நடத்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான சோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் பல ஆயிரம் சோதனைகள் மீதமுள்ளன. மேலும், புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சோதனைகள் ஆய்வு கூடங்களிலேயே நடத்தப்பட்டன. இன்று நடந்த 'ககன்யான் ஒருங்கிணைந்த விமானச் சோதனை' மற்றும் பிற ராக்கெட் தொடர்பான சோதனைகள் மட்டுமே வெளிப்படையாக நடக்கின்றன.

இந்தியாவிலிருந்து இதுவரை இரண்டு பேர் விண்வெளிக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் இந்தியா சொந்தமாக தனது ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதில்லை. இந்த பின்னடைவை சரிசெய்யத்தான் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+