நட்சத்திரங்களின் இறப்பு.. சாத்தியமாகிறதா டைம் டிராவல்? புதிய ஆய்வில் அடியெடுத்து வைத்த இஸ்ரோ!
சென்னை: இந்த ஆண்டின் முதல் நாளான இன்று, இஸ்ரோ புதிய சாதனையுடன் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது. பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டிருக்கிறது.
இது கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலாவை' விரிவாக ஆய்வு செய்யும். இதன் மூலம் டைம் டிராவல் செய்தவற்கான பாதைகளை நம்மால் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பூமி: பல நூறு ஆண்டுகளாக பூமியைதான் சூரியன், சந்திரன் உள்ளிட்டவை சுற்றி வருகின்றன என்று மனிதர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அறிவியல் வளர வளர, சூரியனைதான் நாம் அனைவரும் சுற்றி வருகிறோம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பூமி படைக்கப்படவில்லை, அது மற்ற கோள்களை போல தானாகவே உருவானது என்றும் உறுதி செய்யப்பட்டது. பூமி ஓகே சூரியன் கூடவா சுயமாக உருவானது? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
சூரியன்: இதற்கும் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்தனர். சூரியன் எப்படி உருவானது? என்பது மட்டுமல்லாமல் அது எப்போது அழியும்? எப்படி அழியும்? என்பது குறித்தும் அவர்கள் ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்தனர்.
இரவு வானில் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன்தான். பொதுவாக நட்சத்திரங்கள் உருவாக ஹைட்ரஜனும், ஹீலியமும் அவசியமானது. அதை விட முக்கியம் தூசி துகள்கள்தான். இதை நெபுலாக்கள்தான் உருவாக்குகின்றன. நெபுலாக்கள் என்கிற பெயர் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. இதற்கு தூசி மேகம் என்று அர்த்தம். இந்த நெபுலாவில் இருக்கும் அணு துகள்கள் பெரிய அளவில் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் எனும் கொத்து அமைப்பை உருவாக்குகின்றன.
நட்சத்திரங்கள்: ஏராளமான கிளஸ்டர்கள் ஒன்று சேரும் போது இவற்றிற்கு சொந்தமாக ஈர்ப்பு விசை உருவாகிறது. விண்வெளியில் எந்த பொருள் அதிக நிறையை கொண்டிருக்கிறதோ அதற்கு ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் விதி. எனவே, கிளஸ்டர்களின் ஈர்ப்பு விசை காரணமாக மேலும் அதிகமான துகள்கள் ஒன்று சேர்கின்றன. இப்படியே சுமார் 10 லட்சம் வருடங்கள் தூசி, துகள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னர் அணுக்கரு இணைவு எனும் நடைமுறை தொடங்குகிறது.
வகைகள்: ஆக இப்படியாகதான் நட்சத்திரங்கள்/சூரியன்கள் உருவாகின்றன. நமது சூரியன் கூட அப்படித்தான் உருவானது. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகையாக இருக்கும். சிவப்பு ராட்சதர்கள், வெள்ளை குள்ளர்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சர்கள், சிவப்பு குள்ளர்கள், பழுப்பு குள்ளர்கள் என நட்சத்திரத்தின் எடையை வைத்து அது பலவகையாக பிரிக்கப்படுகிறது. நமது சூரியன் மஞ்சள் குள்ளன் (yellow dwarf) வகையை சேர்ந்தது.
கருந்துளை: இந்த நட்சத்திரங்கள் பல கோடி ஆண்டுகள் கழித்து அழிந்தும் விடும். அழியும்போது சில நட்சத்திரங்கள் மட்டும் கருந்துளையாக (black holes) மாறிவிடுகின்றன. இதுதான் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கருந்துளைகள் மிகவும் சக்தி வாய்ந்த காந்தங்கள் போன்றவை. தனது அருகே வரும் எதையும் அது விட்டு வைக்காது, உள்ளே இழுத்துக்கொள்ளும். அப்படி இழுக்கப்பட்டால் அதிலிருந்து வெளியே வருவது முடியாத காரியம்.
ஆய்வு: முன்பு சொன்னதை போல எல்லா நட்சத்திரங்களும் கருந்துளையாக மாறிவிடாது. நமது சூரியனை போன்று 8-10 மடங்கு அதிக நிறையை கொண்ட நட்சத்திரங்கள்தான் அழியும்போது கருந்துளைகளாக உருவாகும். இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த கருந்துளைக்குள் என்ன இருக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. ஒளி ஒரு பொருளின் மீது பட்டு எதிரொலித்தால் மட்டுமே எதுவாக இருந்தாலும் அதை நாம் பார்க்க முடியும். ஆனால், கருந்துளைக்குள் ஒளி போனால் அது வெளியே வராது. அதாவது எதிரொலிக்காது. எனவேதான் உள்ளே என்ன இருக்கிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இஸ்ரோ: இதற்கான ஆய்வைத்தான் இந்தியா தற்போது தொடங்கியுள்ளது. இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி- 58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை விண்ணில் இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியுள்ளது. இது கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலாவை' ஆய்வு செய்கிறது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, கருந்துளை குறித்த ஆய்வில் இறங்கிய இரண்டாவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்துளை: விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, கருந்துளைகள் என்று ஒன்று இருந்தால், வெண்துளைகள் நிச்சயம் இருக்கும் என நம்புகின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. கருந்துளைகளை விரிவாக ஆய்வு செய்வதன் மூலம் வெண்துளைகளை கண்டுபிடிக்க முடியும். இப்படி வெண்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டால் டைம் டிராவல் என்று சொல்லப்படும் காலப்பணயத்தை செய்ய முடியும். சுருக்கமாக சொல்வதெனில், இந்தியா இப்போது டைம் டிராவலுக்கான பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. யாருக்கு தெரியும்? வேறெந்த நாடுகளும் கண்டுபிடிக்க முடியாமல் போன வெண்துளைகளை இந்தியா கண்டுபிடித்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications