பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் குறைக்க முடிவு? கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி!
சென்னை: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலியால், பெட்ரோல், டீசல் விலைகளை 10 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருவதால் அதன் காரணமாகவும் இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் பெட்ரோல் ,டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்ன உள்ளதோ அதை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே கடந்த 022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை. 10 பைசா 20 பைசா என்ற அளவில் தான் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 77.5 டாலர் என்ற அளவில் இப்போது உள்ளது. அதுமட்டுமல்ல கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வரும் சூழலில் கூட பெட்ரோல், டீசல் விலை குறையாததால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர். இந்நிலையால் தான் இப்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கச் செய்யும் விதமாக லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications