தமிழக வெற்றிக் கழக கொடியில் ‘மலர்’.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க! ஐடியா கொடுத்தது யாரு?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தின் அப்டேட்டை விட அவரது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு குறித்த பேச்சு தான் பரபரப்பாக இருக்கிறது. செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் மாநாடு என்பது உறுதியாகி இருக்க, கொடியில் 'ஒரு மலர்' இடம் பெறப் போவதாகவும், அது என்ன? என்பது தான் தற்போதைக்கு பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தில் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு ட்விட்டரில் வாழ்த்து அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மண்டலம் மாநாடுகள், தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கும் பயணம் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கும் நிலையில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மதுரை அல்லது திருச்சியில் விஜய் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மாநில மாநாட்டை நடத்துவதற்கு ஆரம்பத்திலேயே சிக்கல் எழுந்தது. மாநாட்டுக்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே விஜய் மாநாடு நடத்த இருப்பதாகவும், இதற்காக இடம் தேர்வு உள்ளிட்டவை முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
தேதி இன்னும் உறுதியாகாத நிலையில், நிச்சயம் செப்டம்பர் இறுதி வாரத்தில் மாநாடு நடக்கும் என்கின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். இந்நிலையில் அதற்கு முன்பாகவே விஜய்யின் கட்சிக் கொடி வெளியாகும் எனவும், தவெக தலைவர் விஜய் வெளியிட இருப்பதாகக் கூறுகின்றனர். மாநாடு நடக்கும் நாளில் வெளியிட்டால் அவ்வளவாக நன்றாக இருக்காது எனவே முன்னரே வெளியிட்டால் தமிழகம் முழுவதும் கொடி கட்டி மாஸ் காட்டி விடலாம் என ஆதரவாளர்கள் கூற, மாநாட்டுக்கு முன்னதாகவே கொடி வெளியிடப்படவுள்ளது.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியின் கொடியை செப்டம்பர் 2வது வாரத்தில், அதாவது 12 முதல் 15ஆம் தேதிக்குள் தவெக விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கட்சிக் கொடி தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பெயரில் வெற்றி எனும் வார்த்தை உள்ளது. அந்த வகையில் கொடியில் "வாகை" மலர் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. சங்க இலக்கியங்களில் வெற்றியை குறிக்கிற ஒரு மலராக வாகை வலர் இருக்கிறது. போரில் வெற்றி பெற்ற வீரர்கள் வாகை மலர் சூடி வருவது வழக்கம். அந்த வகையில், கட்சியின் கொடியில் செண்டிமெண்டாக வாகை மலர் இடம் பெற இருப்பதாகக் கூறுகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.












Click it and Unblock the Notifications