மாதா மாதம் மாமூல்..பிரபல பில்டரை மிரட்டிய சம்போ செந்தில்! அடிக்கடி சென்னை வந்து சென்றாரா? விசாரணை
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பிரபல ரவுடியான சம்போ செந்திலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சம்போ செந்தில் மீது புகார் எழுந்திருக்கிறது. மேலும் ரவுடிகள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சம்போ செந்தில் சென்னைக்கு வந்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.
கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாமாக பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை பிரித்து சிலருக்கும் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது போலீசார் தேடி வரும் சம்போ செந்தில், சென்னையில் ஏற்கனவே பல சம்பவங்களை செய்திருக்கிறார். குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திர குமார் கொலை, முத்தியால்பேட்டையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி விஜயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது இருக்கிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டி கொடுப்பதுதான் சம்போ செந்திலின் வேலை என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கும் சம்போ கொலை சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை அதில் முதலீடு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தொழில் போட்டி காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ரவுடி சம்போ செந்தில் உத்தர பிரதேசம் மாநிலம் அல்லது வேறு மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக நொய்டாவில் அவர் இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்போ செந்திலை கைது செய்தால் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகும் என போலீசார் கூறுகின்றனர். இந்த நிலையில் சம்போ செந்தில் அடிக்கடி சென்னைக்குள் வந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவரிடம் சம்போ செந்தில் தரப்பு கட்டுமான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றால் தங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாதம் ஒரு லட்சம் ரூபாயை ஜனவரி மாதத்தில் இருந்து அந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சம்போ செந்திலுக்கு மாமூல் கொடுப்பது போல தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என பிரபல ரவுடிகளான சரவணன் மட்டும் முட்டை கிருஷ்ணன் மிரட்டியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என தொலைபேசி மூலம் சம்போ செந்திலும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இதற்கிடையே அடிக்கடி சம்போ செந்தில் சென்னை வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர். இதை அடுத்து அவரது கூட்டாளிகளை ரகசியமாக கண்காணித்து வரும் போலீசார், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications