வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு
சென்னை: தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் இரண்டாவது நாளாக நேற்று வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக கோவில்பட்டியில் உள்ள ஸ்கேன் மையத்தில் ஐடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சார்பில் பரிசோதனை கூடங்களும் ஸ்கேன் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் குறைந்த செலவில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது தொடர்பான விளம்பரங்களும் வந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள 13 மையங்கள் உள்பட தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.

வடபழனி
சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் கார்பரேட் அலுவலகங்களில் நேற்று காலை முதலே வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த மையங்களின் மருத்துவர்கள், நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அது போல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தாததால் வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டுக்கு வந்து அவரது மனைவி மருத்துவர் கோமதியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டாவது நாள்
இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் 15 அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் ஸ்கேன், மருத்துவ பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏதுமின்றி இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மூன்றாவது நாளாக சோதனை
அதே வேளையில் நோயாளிகள் பணம் செலுத்தும் இடங்களை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரியவரும். இந்த நிலையில் மூன்றாவது நாளாக கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்திலும் அதன் உரிமையாளர் கோவிந்தராஜின் வீடு, திருமண மண்டபத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications