சினிமாவில் நடந்தது போல் இருந்தது.. 2செகண்ட்.. திக் திக் நிமிடங்களை விவரித்த தமிழகம் திரும்பிய பயணி
சென்னை: ஒடிசாவின் பதாராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட ரயிலில் 137 தமிழ்நாட்டு பயணிகள் அதிகாலை சென்னை திரும்பினர். தமிழகம் திரும்பிய பயணி ஒருவர், " ஒரு 2 செகண்ட் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. சினிமாவில் தான் இப்படி ஒரு விபத்தை பார்த்திருக்கிறேன்.. என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம்( வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். இந்த கோர விபத்தில் விபத்தில், இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 803- காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று ஒடிசாவில் முகாமிட்டு உள்ள அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக குழு தெரிவித்துள்ளது. எனினும் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர். ஒடிசாவின் பதாராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட இந்த ரயிலில் 137 தமிழ்நாட்டு பயணிகள் அதிகாலை சென்னை திரும்பினர்.
சென்னை வந்த பயணிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர். ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்க 4 மருத்துவமனைகள் தயார் நிலைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திரும்பிய பயணி ஒருவர், ஒரு 2 செகண்ட் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. சினிமாவில் தான் இப்ப்டி ஒரு விபத்தை பார்த்திருக்கிறேன் என்று கூறினார்.
தமிழகம் திரும்பிய பயணி ஒருவர் கூறுகையில், "நான் துணை ராணுவப்படையில் பணிபுரிந்து வருகிறேன். ரொம்ம மோசமான சூழல். திடீரென ஒரு 6.50 மணிக்கு ஒரு பயங்கர சத்தம் கேட்டது. விபத்து ஏற்பட்டது போல் தெரிந்தது. அந்த நேரத்தில் நாங்க கடைசி பெட்டியில் இருந்ததால் எங்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. முன்னாள் சென்று பார்த்த போது ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டிருந்தது தெரிந்தது. நிறைய பயணிகள் கை, கால்களை இழந்து கிடந்தனர்.
2, 3 செகண்டுக்குள் விபத்து நடந்து முடிந்துவிட்டது. உடனடியாக அந்த ஊர் மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு வந்து உதவி செய்தனர். அதன்பிறகு மீட்பு குழுவும் விபத்து நடந்த பகுதிக்கு வந்து உதவி செய்தனர். விபத்து நடந்த பகுதியில் சிக்னல் குறைந்த அளவே இருந்தது. இதனால் உறவினர்களிடம் செல்போனில் தகவலை தெரிவிக்க சிறிது தூரம் வெளியே செல்ல வேண்டியிருந்தது." என்றார்.
இதே போல் தமிழகம் திரும்பிய கிருஷ்ணகுமார் என்ற பயணி கூறுகையில், "சரியா ஒரு 6.55 மணியளவில் ஒரு பயங்கர சத்தம் கேட்டது. ரயிலில் ஏதோ நடந்துவிட்டது என்பதை உணர்ந்தோம்.. அந்த நொடியே எங்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எங்களது கோச் அப்படியே கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவசர கதவு வழியாக பெட்டிக்கு வெளியே வந்து பார்த்தோம்.
அப்போது வெளியே பார்த்தபோது நிறைய பயணிகள் இறந்த நிலையில் கிடந்தனர். நிறைய பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன" என்றார். இதேபோல் சுகன்யா ராதாகிருஷ்ணன் என்ற பயணி கூறுகையில், "இப்படி சூழ்நிலையை சந்தித்ததே இல்லை. மிகவும் பதற்றமாக உணர்ந்தோம். விபத்து நடந்த அடுத்த நொடியே எங்களால் அங்கு இருக்க முடியுமா என்ற நினைக்க முடியவில்லை. ரொம்ம கஷ்டப்பட்டு தான் அந்த இடத்தை கடந்து வந்தோம்.
அங்கிருந்த உள்ளூர் மக்கள் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டனர். இரவு 7 மணிக்கு விபத்து நடந்தது. 10 மணி வரை நாங்கள் அங்கே தான் இருந்தோம். உள்ளூர் மக்கள் நன்றாக கவனித்துக்கொண்டனர். இந்த விபத்தில் இருந்து இப்போது வரை மீள முடியவில்லை" என்றார். மற்றொரு பயணி கூறுகையில், "திடீரென விபத்து நிகழ்ந்தது. எனக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. பெரிய விபத்து ஏற்பட்டது என்பதை உணர்ந்து பெட்டியில் இருந்து வெளியே வந்தேன்.
வெளியே வந்து பார்த்த போது பெட்டிகள் ஒன்றுக்கொன்று மேலே ஏறி கிடந்தன. வெளியில் பயணிகள் கை, கால்களை இழந்து கிடந்தனர். பார்க்கவே முடியவில்லை. பெரிய விபத்து. சினிமாவில் தான் பார்த்திருக்கேன். இப்போது தான் லைவாக பார்க்கிறேன். ஒரு 2 செகண்ட் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பெட்டி உள்ளே கரண்ட் இல்லை. பெட்டியின் படிகளும் உடைந்து போயின" என்றார்.












Click it and Unblock the Notifications