திமுகவை விமர்சித்தது சரி; விஜய்க்கு என் வாழ்த்துகள்: அணி மாறுகிறரா நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை விஜய் விமர்சித்ததை விசிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் எதிர்த்துப் பேசி வரும் நிலையில், திராவிட இயக்க ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் அதற்கு நேர்மாறாக ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டில் விஜய் மொத்தமாக 45 நிமிடங்கள் பேசினார். அதற்குப் பின்னால் அவரது பேச்சை வைத்துக் கடந்த மூன்று நாட்களாகப் பலரும் பல கருத்துகளை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். விஜய் தன் பேச்சில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

vijay tvk

ஊழலை எதிர்த்து மிக ஆவேசமாகப் பேசி இருந்தார் விஜய். கரப்ஷன் என்பது வைரஸ் என்றார். இந்த ஊழல்வாதிகள் எங்கே இருப்பார்கள்? எப்படி இருப்பார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது. அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். 100% ஊழலை ஒழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும் என்றார்.

மேலும் திராவிட மாடல் என்று பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் திமுகவை நேரடியாக தாக்கி பேசி இருந்தார் விஜய். இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு திமுக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "முதலில் நான் விஜய்யைப் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த்தால் செய்ய முடியாத ஒன்றை விஜய் செய்திருக்கிறார். கமல்ஹாசனால் நினைத்து நிறைவேற்ற முடியாததை விஜய் செய்திருக்கிறார்.

மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டி விஜய் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று என்று சொன்னதை நான் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறேன். சீமான் அதை வம்படியாக மறுத்துவந்தார். ஆனால், விஜய் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதில் எனக்கு மகிழ்ச்சி.

அவர் வெகுஜன மக்களை ஈர்ப்பதற்காகப் பல விசயங்களைச் செய்கிறார். இந்து மக்களின் ஓட்டுக்களைப் பெற பகவத்கீதையை வைக்கிறார். கிறிஸ்தவ மக்களை ஈர்க்க பைபிளை வைக்கிறார். தமிழ் ஆர்வலர்களின் நம்பிக்கையைப் பெற திருக்குறளை முன்வைக்கிறார். இவை எல்லாம் ஓட்டுக்கான அரசியல்தான். ஓட்டு வாங்கத்தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். வேறு எதற்கு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்? பொழுது போக்கவா?

ஆளுநர் பதவி வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். நீட் எதிர்ப்பு பேசி இருக்கிறார். இருமொழிக் கொள்கையை ஏற்று இருக்கிறார். அவர் திமுகவின் நீட்சியாக இருக்கிறார். அதேசமயம் திமுக அரசு மீது ஒரு விமர்சனத்தை வைத்திருக்கிறார். இன்று ஆட்சியில் இருக்கிறது திமுக. அதை விமர்சிப்பதுதான் விஜய்யை பொறுத்தவரை நியாயம். எனவே அதைச் செய்கிறார். திமுக அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்ளும்.

விஜய் அஞ்சலை அம்மாள், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார் என சில தலைவர்களை முன்னிறுத்துகிறார். அது ஒரு அரசியல் யுக்தி. இந்தத் தலைவர்களைச் சார்ந்த மக்கள் விஜய்யை ஆதரிப்பார்கள். வெள்ளைக்காரனை எதிர்க்க மீண்டும் சிவகங்கையை மீட்க ஹைதர் அலியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் வேலுநாச்சியார். ஹைதர் அலி 4 ஆயிரம் படைகளை அனுப்பினார்.

சிவகங்கையை மீட்கப்பட்டதற்கு ஹைதர் அலிதான் காரணம். ஆகவே, நாச்சியாரை விஜய் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார். அதே மாதிரி பெரும்பிடுகு முத்தரையர் போருக்குப் போகும்போது வாகை பூவை சூடிக் கொண்டு போனார் என்று விஜய் சொன்னது எனக்கே புதிய செய்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மை மக்கள் முத்தரையர்கள். அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விஜய் இவரை தலைவராக ஏற்கிறார். அது ஒரு அரசியல் யுக்தி. அவர் திமுகவை எதிர்கிறார் என்றால் அது ஆளும் கட்சி. அதற்காக விஜய்யை எதிர்க்க நான் இன்றைய சூழலில் தயாராக இல்லை. அதை நாளை திமுக எதிர்கொள்ளும். ஸ்டாலின் சமாளிப்பார்.

அதிமுக எதிர்க்கும் அளவுக்கு வலிமையாக இல்லை. எனவே விஜய் அதை விமர்சிக்கவில்லை. ஆனால், மதவாதத்தை முன்வைத்து ஒரு கட்சி உள்ளே நுழையக் கனவு கண்டு கொண்டுள்ளது. அதில் மண் அள்ளிப் போட்டுள்ளார் விஜய்.

ஆகவே, அவரை ஆதரிக்கிறேன். திமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டில்லை. எம்.ஜி.ஆரை எதிர்கொண்ட இயக்கம். காமராஜரை எதிர்கொண்ட இயக்கம். எனவே விஜய்யின் எதிர்ப்பை எல்லாம் கடந்து நிற்கும்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+