தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்... பல இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் -வானிலை மையம்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்றிரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் இதனால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பகலிலும் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications