ஒரே சாதியில் காதல் திருமணம்.. ஆனாலும் ஆணவக்கொலை.. இது சனாதனத்தின் கேடான உளவியல்.. கொதித்த திருமா
ஒரே சாதி என்றாலும் கூட தனது மகளை காதல் திருமணம் செய்த காரணத்தால் ஜெகன் என்ற 28 வயது இளைஞர் கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: கிருஷ்ணகிரியில் ஒரே சாதியாக இருந்தாலும் கூட மகளை காதலித்து கோவிலில் வைத்து திருமணம் செய்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது மாமனார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்தனர். ஆணவக்கொலை என கூறப்படும் நிலையில் இது சனாதனத்தின் கேடான உளவியல் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். அவதானப்பட்டி அருகே உள்ள முக்கான் கொட்டா பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் 2 பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் ஜெகன்-சரண்யா ஆகியோர் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் திருமணம் செய்ய எதிர்ப்பும் கிளம்பியது. இருப்பினும் இருவரும் காதல் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர்.

கோவிலில் திருமணம்
இந்நிலையில் தான் எதிர்ப்பை மீறி ஜெகன் கடந்த மாதம் காதல் திருமணம் செய்தார். கோவிலில் வைத்து சரண்யாவுக்கு தாலி கட்டினார். இதையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் தான் இன்று ஜெகன் தனது மோட்டார் சைக்கிளிலில் கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சரண்யாவின் தந்தை சங்கர் உள்பட சிலர் அவரை வழிமறித்து தாக்கினர். இதனால் ஜெகன் தப்பிக்க ஓடினார்.

4 பேர் மீது வழக்கு
இருப்பினும் அவரை விரட்டி சென்ற கும்பல் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து அவரை வெட்டி கொலை செய்துவிட்டு ஓடியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றிய புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் சரண்யாவின் தந்தை சங்கர், அவரது உறவினர்களான அருள், திம்மராயன், கோவிந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சங்கர் நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் தான் மருமகன் கெஜனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மாமானார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று மாலையில் சரணடைந்தார். அப்போது தனது மகள் சரண்யாவை காதல் திருமணம் செய்தது பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் மருமகனை வெட்டிக்கொன்றதாக கூறி சரணடைந்த நிலையில் மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கொந்தளித்த திருமாவளவன்
இதனை பலரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காதலின் மீதான வெறுப்பு அரசியல் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டதன் விளைவால் ஒரே சாதி எனினும் கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவப் படுகொலை. பெற்ற மகளையே விதவையாக்கிய குரூரம். சாதி கவுரவம், குடும்ப கவுரவம் போன்றவை சனாதனத்தின் கேடான உளவியல். இத்தகைய தீங்கான போக்கு துடைத்தெறியப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications