களையெடுப்பு துவக்கம்.. இது ஆரம்பம் தான்.. 10 நாள் பொறுத்திருங்க.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை
சென்னை: ‛‛இது ஆரம்பம் தான். இன்னும் 10 நாட்கள் பொறுத்திருங்கள். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் இருக்கு'' என பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டது மற்றும் சூர்யா சிவாவின் ஆபாச பேச்சு தொடர்பாக அண்ணாமலை பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவில் பிசி பிரிவில் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் சூர்யா சிவா. இவர் திமுகவின் மூத்த தலைவரா ன திருச்சி சிவாவின் மகன் ஆவார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.

சூர்யா சிவா விவகாரம்
இந்த ஆடியோவில் சூர்யா சிவா, அந்த பெண் நிர்வாகியை ஆபாசமான வார்த்தைகளால் அவதூறாக திட்டுவதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரணைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதோடு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராமையும் நேற்று கட்சியில் இருந்து 6 மாதம் வரை அண்ணாமலை நீக்கம் செய்தார்.

அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக தலைவர்கள் இடையேயான பேச்சின் ஆடியோ விவகாரம் பற்றியும், கட்சியில் இருந்து 6 மாதம் வரை நீக்கம் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் விவகாரம் குறித்து அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை
சூர்யா சிவா விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை நாளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட விஷயமாக இருவரும் பேசியிருந்தாலும் கூட பாஜக நடவடிக்கை எடுக்கும். இது அரசியலில் புதிது. பொதுவெளியில் மேடைகளில் பேசவில்லை. எங்களுக்குள் பேசி கொண்டோம் என கூறினாலும் கூட நடவடிக்கை என்பது உறுதியாக எடுக்கப்பட உள்ளது.

நாகரிகமான அரசியல்
பாஜக நாகரிகமான அரசியலை செய்து வருகிறது. ஆடியோ விவகாரத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆடியோவை கொண்டு வந்து தர வாய்ப்புள்ளது. இதனால் தான் விசாரணை என்பது இந்த விஷயத்தில் தேவையானதாக உள்ளது'' என்றார்.

10 நாள் பொறுத்திருங்கள்
இந்த வேளையில் காயத்ரி ரகுராமை கட்சியை விட்டு நீக்கியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, ‛‛கட்சியில் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 10 நாள் பொறுத்திருங்கள். டிசிபிளின் விஷயத்தில் கட்சியின் லட்சுமண ரேகையை யார் மீறினாலும் கட்சி தலைவராக நான் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆரம்பம் தான். கட்சி கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் களை எடுக்கப்பட வேண்டியவர்களை நிச்சயம் களை எடுப்பேன். இதில் மாற்று கருத்தும் இல்லை. இல்லாவிட்டால் கட்சி என்பது அடுத்தக்கட்டத்துக்கு செல்லாது.

பாஜக அனைவருக்குமான கட்சி
பாஜக எங்கள் கட்சி. நாங்கள் தான் பாஜக. இங்கு வேறு யாரும் வரமுடியாது என யாரும் சொல்ல முடியாது. பாஜகவை யாராவது இரும்பு பிடியில் வைத்திருப்பேன் என நினைத்தால் எனது பதவிக்காலத்தில் அனுமதிக்க போவது இல்லை. பாஜகவை யாரும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது. பாஜக இவர்களுக்கான கட்சி. அவர்களுக்கான கட்சி என்பது இல்லை. பாஜக என்பது அனைவருக்குமான கட்சி.

பஸ்சை உதாரணம் காட்டி..
அதேவேளையில் ஒரு பஸ் முழுவதும் பயணிகள் சென்றால் அதில் மற்றவர்கள் பயணிக்க முடியாது. சிலர் கீழே இறங்கினால் தான் அதில் மற்றவர்கள் ஏறி பயணிக்க முடியும். இவ்வாறு வருபவர்கள் திறமை வாய்ந்தவர்களாக கூட இருக்கலாம்'' என அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications