Exclusive: மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.. மாதவன் டார்ச்சர் எல்லாம் வதந்தி.. ஜெ. தீபா விளக்கம்
சென்னை: நான் நலமாக உள்ளேன், எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை, தற்கொலை முயற்சியையும் நான் செய்யவில்லை என ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, தனது அத்தை இறந்த பிறகு அவரை போன்ற தோற்றத்தில் இருப்பதாக அதிமுகவினர் சிலர் திநகரில் சிவஞானம் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
முதலில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு தனது ஆதரவை தந்த தீபா, பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார். இதில் நிறைய பேர் இணைந்தனர்.

ஆர் கே நகர் இடைத்தேர்தல்
ஆனால் விண்ணப்ப படிவங்களை பணத்திற்கு கொடுத்ததில் ஏதோ மோசடி நடந்ததாக குற்றம்சாட்டி தொண்டர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவில் தவறு இருப்பதாக கூறி மனு நிராகரிக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம்
இதையடுத்து அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது கணவர் மாதவனுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று வருவார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு ஜெ தீபாவுக்கு அவரது சகோதரர் தீபக்கிற்கும் சொந்தம் என தீர்ப்பு வந்தது. இந்த வீட்டிற்கு செல்வதில் தம்பியுடனும் ஜெ தீபாவுக்கு பிரச்சினை இருந்து வருகிறது.

விவாகரத்து
இந்த நிலையில் கணவர் மாதவன் தன்னை விவாகரத்து செய்யுமாறு துன்புறுத்துகிறார். தினமும் இரவு 12 மணிக்கு தன்னுடன் சண்டையிடுகிறார். இது விடிய விடிய போகிறது. தனக்கு யாரும் ஆதரவு இல்லை, தட்டி கேட்டவும் ஆள் இல்லை என்பதால் மாதவன் இது போல் நடந்து கொள்கிறார் என தீபா தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் தெரிவித்திருந்தார்.

மாதவன் அறிக்கை
இதை மாதவன் மறுத்துள்ளார். தனக்கு தீபாவுடன் சேர்ந்து வாழவே விருப்பம் என்றும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற விருப்பமே இல்லை என்றும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெ தீபா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலை முயற்சி செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

நலமாக இருக்கிறேன்
இதுகுறித்து ஜெ தீபாவிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் கேட்ட போது நான் நலமாக இருக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் இல்லை. எனக்கும் மாதவனுக்கும் பிரச்சினை இருந்தது. எப்போதும் போல்தான், எல்லார் வீட்டிலும் நடப்பது போல் சாதாரண சண்டை. நான் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் போட்டது உண்மைதான். இதன் பிறகு எங்களுடைய இரு தரப்பை சேர்ந்த குடும்பத்தினர் பேசி சமரசம் செய்து விட்டனர். நாங்கள் இருவரும் சேர்ந்து இரு நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பர்சேஸில் இருந்தோம். பத்திரிகையாளர்களை என் நண்பர்களாக நினைக்கிறேன், தயவு செய்து பொய்யான செய்திகளை போடாதீர்கள் என்றார் தீபா.












Click it and Unblock the Notifications