புனிதராகும் நோக்கமா?.. அன்புமணி கேட்ட கேள்வி.. சிம்பிளாக பதில் சொன்ன சூர்யா.. மோதலுக்கு காரணம் என்ன?
சென்னை: ஜெய் பீம் படம் மற்றும் அதை தொடர்ந்த சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் வெகுண்டெழுந்து உள்ளனர். இந்த படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை.. மோதல் தொடங்கியது எங்கே என்று பார்க்கலாம்.
நடிகர் சூர்யா, லிஜோமோல், மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி அமேசானில் ஹிட் அடித்த படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் ராஜ்கண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றையும், இதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு நடத்திய சட்ட போராட்டம் பற்றியும் பேசுகிறது.
பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜ்கண்ணு, அவரின் மனைவி பார்வதி ஆகியோரின் நிஜ வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த கதை புனையப்பட்டு உள்ளது. இதில் என்ன சர்ச்சை என்று கேட்கலாம்.

சர்ச்சைக்கு காரணம்
இந்த படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவரின் வீட்டில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கும் காலண்டரும் இருந்தது. இந்த நிலையில் உண்மை சம்பவத்தில் அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோணி சாமி. அதோடு இவர் அந்த குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் கிடையாது. மாறாக ராஜாக்கண்ணுவிற்கு நீதி வேண்டி போராடிய சிலரில் அந்த குறிப்பிட்ட ஜாதியினரும் உள்ளனர்.

பாமகவும் போராட்டம்
அதேபோல் பாமகவும் அப்போது கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளோடு சேர்ந்து ராஜாக்கண்ணுவிற்காக போராடியது வரலாறு. இந்த நிலையில்தான் குறிப்பிட்ட ஜாதியினரை வேண்டுமென்றே தவறாக ஜெய் பீம் படத்தில் காட்டி இருப்பதாகவும், உண்மையை திரித்துவிட்டதாகவும் கூறி பாமக இதில் கொதித்து எழுந்தது. அந்த குறிப்பிட்ட ஜாதியினரும், எங்களை அவமதித்துவிட்டதாக கூறி போராடி வருகிறார்கள்.

பாமக கொதிப்பு
பாமகவின் கொதிப்பை தொடர்ந்து படத்தில் அந்த 'காலண்டர் காட்சி'யில் திருத்தம் செய்யப்பட்டது. அதோடு இதை வேண்டுமென்றே வைக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. இந்த படமே சமத்துவத்தை பேசி உள்ளது. நாங்கள் எப்படி ஒரு சாதிக்கு எதிராக பேசுவோம் என்று படக்குழு தரப்பு பதில் அளித்தது. இதோடு பிரச்சனை முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video

அன்புமணி கேள்வி
ஆனால் அதன்பின் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு 9 கேள்விகளை எழுப்பி நீண்ட கடிதம் எழுதி இருந்தார். அதில், படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது: மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்! உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.

கோபம்
இராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு இராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குனரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

ஏன்?
காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட இராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார்.

புனிதர்
மேலும், கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?ஜெய்பீம் திரைப்படம் உங்களை புனிதராகக் காட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக பொதுமக்களும், இளைஞர்களும் கொந்தளித்த பிறகும், படக்குழுவினரின் தவறுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது., என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

சூர்யா பதில்
இதற்கு நடிகர் சூர்யா அளித்த பதில் அறிக்கையில் சர்ச்சையை பெரிதாகாமல் சிம்பிளாக புரிதலுக்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடுநீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை .

பிழை
சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவிர்கள் என நினைக்கிறேன். 'படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை' என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, 'படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்' என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

அக்கறை
எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை . உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், 'பெயர் அரசியலால்" மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி, என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.

போராட திட்டம்
ஆனால் இதோடு சர்ச்சையை முடிக்காமல் பாமக தரப்பு தற்போது சூர்யாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று பாமகவினர் போராட்டத்தால் இந்த படமும் நிறுத்தப்பட்டது.

ரசிகர்கள் பதிலடி
அதோடு இனி சூர்யா படம் எங்கே வந்தாலும் அங்கும் இதே போராட்டங்களை பாமக முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகும் பட்சத்தில் அதற்கும் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து சூர்யாவிற்கு ஆதரவாக இணையத்தில் தற்போது #WeStandWithSuriya என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. தேசிய அளவில் இந்த டேக் வைரலாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் பலர் ஒன்று கூடி ட்வீட் செய்து வருகிறார்கள்.

வழக்கு
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம், ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சைலன்ட்
இப்படி வரிசையாக அடுத்தடுத்து பிரச்சனைகள் போக திரைத்துறையினர் இன்னொரு பக்கம் அமைதி காத்து வருகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் தங்கள் படத்திற்கு பிரச்சனை வர கூடாது என்று அமைதி காத்து வருகிறார்கள். அதேபோல் திரைப்பட சங்க நிர்வாகிகளும் சூர்யா அமேசானில் படத்தை வெளியிட்டதால் சூர்யாவிற்கு ஆதரவு அளிக்க மறுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications