கடுகடுத்த ஜேம்ஸ் வசந்தன்.. டிவி பாடல் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரிடம் கோபப்பட்டது ஏன்?
சென்னை: தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரிடம் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுகடுப்போடு பேசிய வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்படும் நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "சமூக ஊடகங்களில் ஒரு பாடல் திறன் போட்டித் தேர்வில் ஒரு போட்டியாளரை நான் கடிந்துகொண்டக் காணொலி ஒன்று வலம் வருகிறது. என் facebook-ல் சிலர் இதைப் பகிர்ந்து இதன் பின்னணியைக் கேட்டதனால் இந்தப் பகிர்வு. இது 2011-ல் ஜெயா தொலைக்காட்சியில் நடந்த 'ஹரியுடன் நான்' என்கிற பாடல் திறன் போட்டி நிகழ்ச்சி. முதன்முறையாக 'ஹரிஹரன்' போன்ற ஒரு மாபெரும் பாடகரை தமிழ்த் தொலைக்காட்சிக்கு அழைத்து வந்த நிகழ்ச்சி.

அதற்கான குரல் தேர்வு பல மாவட்டங்களில் நிகழ்ந்தது. இந்தப் பெண் பாடியது கோவையில் என்று நினைக்கிறேன். இவரிடம் நான் (பிற நடுவர் சார்பாகவும்) கோபப்பட்டது உண்மைதான். பொதுவாக இதைப்போன்ற குரல் தேர்வுகளுக்கு மூன்று விதமானப் போட்டியாளர்கள் வருவார்கள். அவர்கள் பின்னணிக்கேற்ப அவர்களைக் கையாள்வது, தேர்வு செய்வது வழக்கம். மற்றவர் எப்படியோ, ஆனால் நான் இப்படித்தான் அணுகுவேன். அணுகினேன். முதல் பிரிவு முறைப்படி ஒரு குருவிடம் செவ்விசை பயின்றவர். இரண்டாவது, எதையும் கற்காமல், நல்ல கேள்வி ஞானத்துடன் நன்கு பாடக்கூடியவர். கடைசிப் பிரிவு, இதில் எதுவுமில்லாமல் ரொம்ப சுமாராகப் பாடுகிற பெரும்பான்மையினர்.
இந்தப் பெண் மேடையில் வந்து நிற்கிறார். தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். என்ன பாடப் போகிறீர்கள் என்றதும் தனக்கு எந்தத் திரைப்படப் பாடலும் தெரியாது என்கிறார். நாங்கள் வியப்புற்றோம். அவர் பின்னணியைப் பற்றி விசாரித்தபோது ஒரு குருவிடம் 14 ஆண்டுகள் செவ்விசை கற்பதாகச் சொன்னார். இது வியப்பை அதிகரிக்கச் செய்தது.
திரைப்பாடல்களில் கர்நாடக சங்கீத ராகங்களில் அமைந்த நூற்றுக்கணக்கான அருமையானப் பாடல்கள் இருக்கின்றதே என கேட்க, எதுவுமே தெரியாது என்றார். ஏதாவது ஒரு பாடல் பாடச்சொல்லிக் கேட்டபோது ஒரு பக்திப்பாடல் பாடினார். சுமாராக இருந்தது.
ஆனால் அவர் திறமையை முழுமையாகக் கணிக்க இயலவில்லை.
ஆயிரக்கணக்கானோர் வெளியில் வரிசையில் காத்து நிற்க, நாங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்து விரைவாக முடிக்க வேண்டிய நிலையில் இருந்தோம். இசை பயின்றவராயிற்றே என்று இன்னொரு வாய்ப்பு கொடுத்து ஏதாவது ஒரு திரைப்படப் பாடல் பாடிக்காட்டுங்கள் என்று சொன்னோம். "கோடான கோடி" என்று தொடங்கியவுடன் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மீதம் நீங்கள் அந்தக் காணொலியில் கண்டதுதான்.
1. இதில் வெற்றி பெறுபவர் ஹரிஹரனோடு இணைந்து சில பெரிய மேடைகளிலும், ஒலிப்பதிவுகளிலும் பாடும் அரிய வாய்ப்பு கிடைக்கும் என்பது பரிசுகளில் ஒன்று. இந்த நிலையில், எப்படிப்பட்டவரெல்லாம் இதில் போட்டியிட வருவார்கள் என்பதும், இதை எவ்வளவு தீவிரத்துடனும், அக்கறையுடனும் அணுகவேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
2. இது முழுக்க முழுக்க திரைப்பாடல்கள் பாடும் போட்டி.
3. முதல் கட்டக் குரல் தேர்வில் தேர்வாகத் தவறினால் அவ்வளவுதான், இந்நிகழ்ச்சியில் தொடரவே இயலாது. நல்ல திட்டமிட்டு, பயிற்சி செய்து வந்தால் இறுதி வரைப் பயணிக்கலாம். அப்படித்தான் பலர் பயணித்தனர். இதில் எதையுமே உணராமல் இவ்வளவு பெரிய போட்டிக்கு 14 ஆண்டுகள் இசை பயின்ற ஒரு இளம்பெண் வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்! இது அவர் குருவுக்கு அவர் செய்யும் அவமரியாதை என்பதும் கூடுதல் காரணம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications