பிக்பாஸ் சீசன் 7: விசித்ரா- ஜோவிகா இடையே அடிப்படை கல்வி பஞ்சாயத்து.. குறுக்கே வந்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: அடிப்படை கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கு இன்றியமையாததுதான். ஆனால் அதை சொல்லும் விதம் என்பது வேறு என பிக்பாஸில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: Bigg Boss 7 முதல் வாரத்திலேயே ஒரு விவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. வனிதா விஜயகுமாரின் 18-வயது மகள் ஜோவிகா எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

அதுவே அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்திருக்கிறது. படிப்பு வரவில்லை. கூடவே, இவர் நன்றாகப் படிக்கும் பிற மாணவருடன் ஒப்பிடப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் படிப்பின் மீது வெறுப்பும் வந்து அத்தோடு நிறுத்திவிட்டார். அவர் வளர்ந்த கடுமையான இளம் பருவத்துச் சூழலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமையல் கலையைப் படிக்கவும், நடிக்கவும் விரும்புகிற இவரை பிறர் படிக்கச் சொல்லி அறிவுரை சொல்லும்போது சினமடைகிறார். பலர் இப்படியே போதனை வழங்கியிருப்பார்கள் போல. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பேசுவதையே விரும்பாத அவரை இந்நிகழ்ச்சி சீண்டிவிட்டிருக்கிறது.
உணர்வுகளின் அலைக்கழிப்பில் அவர் பேசிய அந்த நீண்ட (நாகரிகமான) பேச்சின் நடுவே அவர் சொன்ன "எல்லாருமே படிச்சு பெரிய ஆளாகணுன்னு இல்லை" என்கிற ஒற்றை வரியை அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு, ஏதோ அவர் அடிப்படைக் கல்விக்கே எதிரி போலவும், கல்வியே தேவையில்லை என்று சொன்னது போலவும் பேசிவருவது விஷமம்.
மனித சமூகத்தில் மிக மலிவாகக் கிடைக்கும் ஒன்றே ஒன்று அறிவுரைதான். அதைச் சொல்லும் விதத்தில் பக்குவமாகச் சொன்னால் மட்டுமே உரிய பலனை அளிக்கும். அந்த நிகழ்ச்சியில் விசித்ரா சொன்னதுபோல் சொன்னால் இப்படி எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும். அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பது பண்பட்ட மனித சமூகம் உணர்ந்த ஒன்று. இதை எல்லாரும் அறிவர்.
இந்நிலையில், இக்கருத்தை ஆவேசமாகச் சொல்ல முயன்ற விசித்ராவின் அணுகுமுறை அடிப்படைத் தத்துவத்தையே விவாதத்துக்கு இடமாக்கி விட்டது. விசித்ராவின் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முழுக்க முழுக்கச் சரி. ஆனால், வெளிப்படுத்திய விதம் முழுக்க முழுக்கத் தவறு. இந்த வயதில், இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு உங்களுக்கு உங்கள் சொல்லிலும், செயலிலும், உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லையென்கிற நிலையில் நீங்கள் எப்படி இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லமுடியும்?
ஒரு நல்ல அறிவுரையைச் சொல்கிறேன் என்று பிறர் மனம் நோகும் அளவுக்கா சொல்வது? மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? என ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார். ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவர் பள்ளி படிப்பை கைவிட்டதாக கூறுகிறார்கள். அவர் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவரை பல பள்ளிகளில் மாற்றியும் அவரால் படிக்க முடியவில்லை என கூறியதை அடுத்து அவர் தாய் வனிதா அவருடைய ஆசை என்ன என கேட்டதும் சினிமாவில் நடிக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து முறையாக நடிப்பு பயிற்சியையும் அவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவரை பிக்பாஸ் வீட்டில் அடிப்படை கல்வி தேவை, ஒரு டிகிரியாவது வாங்கிவிடு என கூறிய நிலையில் விசித்ரா கூறியது பெரும் கொந்தளிப்பை ஜோவிகாவுக்கு ஏற்படுத்தியதன் வெளிப்பாடே அன்று நடந்த விவகாரம்.












Click it and Unblock the Notifications