Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புதிய பாதை"! ஜான் ஜெபராஜ் செய்தது எல்லாம் பைபிளுக்கு முரணானது! ஜேம்ஸ் வசந்தன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் செய்த தவறு என்ன என்பது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 11.25 மணிக்கு பதிவு செய்திருப்பதாவது: "'ஜான் ஜெபராஜ்' கிறிஸ்தவ மத போதகர் என்றாலும் பிறரும் அறிந்த ஒரு பெயர். மிகக் குறுகிய காலத்திலேயே புகழிலும், பணத்திலும் உச்சத்திற்குச் சென்ற இளைஞர். ஏறு வேகம் ரொம்ப அதிகம் என்பதால் இயற்கை விதியின்படி சறுக்கலும் அதே வேகத்தில்.

james vasanthan john jebaraj

இந்தப் பதிவு அவர் வீழ்ந்திருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி அவரைச் சிறுமைப்படுத்துவதோ, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் செயல்பாடுகளை விமர்சிப்பதோ அல்ல. அவர் பொதுவெளியில் ஒரு கிறிஸ்தவராக, ஒரு போதகராக நடந்து கொண்டதைப் பற்றி மட்டுமே.

அதை ஏன் இப்போது சொல்ல வேண்டும்?
பிறர் சொல்வதைக் கேட்கிற அளவுக்கு ஓய்வும், அவற்றை சிந்தித்துப் பார்க்கிற அளவுக்கு நிதானமும் அவருக்கு இப்போது வாய்த்திருக்கிறது. அதனால்.
அவரைச் சுற்றி எழுந்திருக்கும் சச்சரவு கிறிஸ்தவர் மத்தியில் ஒரு அச்சம் கலந்த அமைதியையும், பிறர் மத்தியில் கெக்கலிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

விசுவாசிகளுக்கு கிறிஸ்தவம் இப்படி கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டதே என்கிற கவலை. போதகர்களுக்கு நமக்கு ஏன் வம்பு என்கிற மனநிலை. தொடக்கத்திலிருந்தே ஒரு புதிய பாதையை வகுத்துக் கொண்டவர் ஜான் ஜெபராஜ். அது தன் சினிமாக் கனவுகளை யேசுவைக் கொண்டு சாதித்துக் கொள்ள சிந்தித்த சாதுர்யமான பாதை. அது சரியான பாதையா என்றால், இல்லை.

யேசுவைப் போதிப்பது நோக்கமாக இருந்திருந்தால் அவர் இந்தப் பாதையை சிந்தித்திருக்கக் கூட மாட்டார். தன் கதாநாயகக் கனவுகளும், தன் திறமையை வெளிக்காட்டும் ஆர்வமுமே முதன்மையானதால் இது அவரது பாதையானது. ஜான் ஜெபராஜ் திறமைசாலி, அறிவாளி என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. ஆனால் அவைகளை எப்படி, எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி. இங்குதான் தவறினார்.

தன் தோற்றத்தையும், பாடல் இயற்றும் திறமையையும், பாடும் திறமையையும், ஆடும் திறமையையும் மூலதனமாக்கி அவைகளைக் கொண்டு இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து திரைப்பட நாயகர்களுக்கு இணையான பெருமைநிலையை அடைந்துவிட்டார். இதை அவர் திரையுலகிற்கு வந்தே செய்திருக்கலாம். அங்கு அமர்ந்து இதைச் செய்வதுதான் பேராபத்து. நிறுத்தப்பட வேண்டிய மிக மிகத் தவறான செயல்பாடு.

ஆபத்து யாருக்கு என்றால் இவருடைய சபையில் இவரை நம்பி முன்வரிசையில் நின்று ஆடிப்பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியரும், இளைஞரும்தான். அவருடைய மிகப்பெரிய சாதுர்யம் என்னவென்றால் தனக்குப் பாராட்டும், புகழும் கிடைக்கிற கோணத்தில் ஒன்றை மிகத் திறமையாக விவரித்துச் சொல்லிவிட்டு, இறுதியில் யேசுவின் பெயரை சேர்த்துவிடுவார். உடனே வசியம் செய்யப்பட்ட அந்த மக்கள் மந்தையும் கைத்தட்டி ஆரவாரிக்கும். இவர் எல்லாவற்றையும் கடவுளின் மகிமைக்காகச் செய்வதைப் போல ஒரு மாயத்தோற்றம் உருவாகும்.

வேதம் பரிசுத்தமானது. ஓய்வு நாள் பரிசுத்தமான நாள். பரிசுத்தமான கர்த்தரை ஆராதிக்கிற அந்த பரிசுத்தமான தருணம் எவ்வளவு பயபக்தியுடன் வழிநடத்தப்பட வேண்டிய ஒரு வேளை? அங்கு இவர் பயன்படுத்துகிற வார்த்தைகளைக் கேட்டால் நம் உடல் நடுங்கும்.
அசிங்கசிங்கமான சொற்களும், தெருவோரப் பேச்சாளர் போன்ற தொனியும், கேவலமான உடல்மொழியும், பிற போதகர்களை நக்கலடிக்கிற பாணியும், அவர்களுக்கு மிரட்டலும், எச்சரிக்கையும் விடுகிற பாங்கும் இவர் யார் என்பதை உரக்கச் சொன்னது.

என் கவலை இவரைப் பற்றியே அல்ல. இவர் முன்பு நின்று ஏமாந்து கொண்டு ஆராதனை என்கிற பெயரில் அவலங்களையும், அசிங்கங்களையும் முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையைப் பற்றித்தான். இவரைக் கண்டித்து, தவறுகளை தவறுகள் என்று சொல்லத் தவறிய போதகர்கள்தான் இந்தச் சூழலை இன்னமும் மோசமாக்கியக் குற்றவாளிகள். சிலர் சொன்னார்கள். பலர் இவரது ரசிகர்களைப் பகைத்துக் கொண்டு தங்கள் புகழுக்குப் பங்கம் வந்துவிடக்கூடாதென்று அமைதி காத்தார்கள்.

சிலர் இன்னமும் மேலே ஒரு படி போய், இவரைக் கொண்டுவந்து நிகழ்ச்சிகள் நடத்தி பணமும் பெயரும் சம்பாதித்துக் கொண்டார்கள். ஜான் ஜெபராஜ் ஒரு விசுவாசியாக மட்டும் இருந்து இப்படி செயல்பட்டால் அது அவரைப் பற்றிய தனிமனித விமர்சனமாக மட்டும் நின்றுவிடும். பெரிய சேதமில்லை. ஆனால் அவர் ஒரு 'கிறிஸ்தவ மத போதகர்' என்றுதான் செய்திகளில் தோன்றுகிறார்.

அது கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவத்துக்கும் நேரிடுகிற பேரிழப்பு. ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தின் மதிப்பீட்டையும் இவரை வைத்து எடைபோட இடங்கொடுக்கிறார் என்பதுதான் வேதனை.

கிறிஸ்தவர் அல்லாதவருக்கு என்னுடைய செய்தி: "நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். "யேசு இரட்சகர்" என்று அவர் சொல்வதைத் தவிர அவர் வெளியரங்கமாகச் செய்கிற மற்ற அத்தனையும் பைபிளுக்கு முற்றிலும் முரணானது. கர்த்தருக்கு அருவருப்பானது. எல்லாம் நியாயந்தீர்க்கப்படுகிற நாளன்று இவை நிரூபணமாகும். But it will be too late to do anything about it." இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+