"முதல்வர்" விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன முக்கியமான தகவல்
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஒருபுறம் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே அந்தப் படத்தின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது என்பது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வெள்ளித்திரையில் தனது திரைப் பயணத்தை முடித்துவிட்டு, நிஜ வாழ்க்கையில் 'முதல்வர்' நாற்காலியில் அமர்ந்துள்ளார் விஜய்.. அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' எப்போது திரைக்கு வரும் என்பதே இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். அவருடைய ரசிகர்கள் ஜனநாயகன் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும், சென்சார் பிரச்சினை என்னவானது என்பது இன்னுமே தெளிவாகத் தெரியவில்லை..

ஜனநாயகன்
இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்டிடிவி ஆங்கில ஊடகத்திற்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் இந்தப் படத்தை ஆரம்பித்தபோது விஜய் சார் முதலமைச்சராவார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவர் நிஜமாகவே தமிழகத்தின் 'ஜனநாயகன்' ஆகிவிட்டார். ரசிகர்கள் இப்போது ஒரு புதுக் கோரிக்கையை முன்வைக்கிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் 'தளபதி விஜய்' என்பதற்குப் பதிலாக 'தமிழக முதலமைச்சர் விஜய்' என்று போடச் சொல்கிறார்கள்.
படம் தள்ளிப்போவதற்கு மிக முக்கியமான காரணம் சென்சார் சான்றிதழ் பெறுவதில் நீடிக்கும் சிக்கல்தான். 2025 டிசம்பர் மாதமே தணிக்கைக்கு விண்ணப்பித்தபோது, ஆரம்பத்தில் படத்தைப் பார்த்த கமிட்டி 'U/A 16+' சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், சான்றிதழ் கைக்கு வரும் நேரத்தில், படத்திற்கு எதிராக ஒரு புகார் வந்திருப்பதாகவும், அதனால் ரிவிஷன் கமிட்டிக்கு படம் அனுப்பப்படுவதாகவும் இமெயில் வந்தது.
என்ன நடந்தது
நாங்கள் இன்னும் திரைப்படத்தை வெளியிடவே இல்லை, அப்படியிருக்க எப்படி ஒரு புகார் வர முடியும் என்று கூறி, நாங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இருப்பினும், சென்சார் விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பதில் வாரியமே இறுதி அதிகாரம் கொண்டிருப்பதால், பொதுமக்களின் புகார்களை ஏற்கக்கூடாது என்று கூறும் பல தீர்ப்புகளும் உள்ளன. ஆனால், தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் புகார் அளித்தார் என்பதை நீதிமன்றத்தில் தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.
ரிலீஸ் எப்போது
இதனால் நாங்கள் மறு ஆய்வுக் குழுவை அணுக வேண்டியிருந்தது. அதன்பிறகு உடனடியாக நாங்கள் மறு ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பித்தோம், அன்று முதல் இந்தச் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்ற வேண்டும், எனவே நாங்கள் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம்.. சான்றிதழ் கிடைத்ததும் படம் உடனடியாக ரிலீஸ் செய்யப்படும்" எனத் தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளார்"
லீக் விவகாரம்
சென்சார் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, 'ஜனநாயகன்' படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்தது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் புலனாய்வு செய்த போலீஸார், உதவி எடிட்டர் ஒருவர் உட்படப் பலரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹெச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications