பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர் பங்காரு அடிகளார்! ஜவாஹிருல்லா இரங்கல்!
சென்னை: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடம் தலைவர் பங்காரு அடிகளார் மறைவுக்கு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் மரணச் செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லாவை போலவே மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் பங்காரு அடிகளார் மறைவுச் செய்தி அறிந்து வருந்துவதாக கூறியுள்ளார். இதனிடையே இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு;

பெண்களுக்கான வழிபாட்டு உரிமை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர். தமது சேவைக்காக ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர்.
தமிமுன் அன்சாரி இரங்கல்: அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், பங்காரு அடிகளார் மாரடைப்பால் இறந்த செய்தி அறிந்து வருந்துகிறோம் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள்: பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தாலும் கூட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களான ஜவாஹிருல்லாவும், தமிமுன் அன்சாரியும் இரங்கல் தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் சாதி, சமயங்களை கடந்து எல்லோருடனுமான நட்புறவு பேணப்படுவதை இந்த இரங்கல் பதிவு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications