சிறந்த நிர்வாகத் திறனுக்கு தமிழக பட்ஜெட் ஒரு எடுத்துக்காட்டு! ஜவாஹிருல்லா பாராட்டு!
சென்னை: சிறந்த நிர்வாகத் திறனுக்கு தமிழக பட்ஜெட் ஒரு எடுத்துக்காட்டு என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக நலத்திட்டங்களுக்கு எவ்விதக் குறையுமின்றி அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நிர்வாக திறன்
இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் நிதி மேலாண்மை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில் முதன் முறையாக நிதிப்பற்றாக்குறை 4.333 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்ற நிலை திமுக அரசின் நிர்வாக திறனுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

பன்முக பண்பாடு
நாட்டின் பன்முக பண்பாட்டைப் பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில் தமிழ் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்று நிதி அமைச்சர் தனது உரையில் பறைசாற்றியிருப்பதை பாராட்டுகிறேன். சமூக நலத்திட்டங்களுக்கு எவ்விதக் குறையுமின்றி அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மெச்சத்தக்கது.

பெரியாரின் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய. உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு சமூக நீதியைப் பரவலாக்க இந்த அரசு கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.அரசு நிதியுதவியின்றி செயல்பட்டு வரும் தமிழ் வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 கோடி மதிப்பீட்டில் பாடநூல்கள் முதலிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்வழியில் பயில்வதற்கு பெரும் ஊக்கமாக அமையும்.

காவிரி படுகையில்
காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல். புனரமைத்தல். நவீனமயமாக்குதல் போன்ற பணிகளுக்காக 3.384 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாசனத்திற்கான நீர் தங்கு தடையின்றி வழங்குவதற்கு வழிவகுக்கும் காவிரி படுகையில் உள்ள 10 மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரும் சிறப்புப் பணிக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறுவை சாகுபடிக்குப் பெரிதும் பயன்படும்.

18000 புதிய வகுப்புகள்
அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கப் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தி அதன் வாயிலாக 18000 புதிய வகுப்புகள் கட்டப்படும் என்றும் திறன்மிகு வகுப்பறைகளும், அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளை மேலும் வளப்படுத்தும்.

பிரத்யேகத் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி படிக்க மாதம் ரூ1000 அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்துவோம் என்று அறிவித்துள்ள இந்த அரசு இது போல் முஸ்லிம் மாணவிகளுக்கும் பிரத்தியேக திட்டம் ஒன்றை அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வரியில்லா பட்ஜெட்
மிகப் பெரும் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் பெரும் வரி விதிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வரியில்லாமல் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும் நலிவுற்ற பிரிவினர்களில் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் சீர்மிகு நிதி நிலை அறிக்கை அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications