அதிமுக ஓட்டுக்கள் விஜய்க்கு செல்லுமா? - ஜெயக்குமார் கொடுத்த "நச்" பதில்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் நேற்று முன்தினம் தொடங்கினார். இந்நிலையில், அதிமுக தலைவர்கள் படங்களை தவெக கட்சியினர் உபயோகிப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் தான். அதேநேரத்தில் எம்ஜிஆர், அண்ணா படத்தை வைப்பதால் மட்டும் அந்த ஓட்டுகள் விஜய்க்கு போகாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதவாது: அதிமுகவில் இருந்த பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, செங்கோட்டையன் அவர்கள் மறப்போம், மன்னிப்போம் என்று கூறியுள்ளார். செங்கோட்டையன் விவகாரம் குறித்து பொதுச் செயலாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.

எம்ஜிஆர், அண்ணா ஆகிய தலைவர்கள் உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள். எங்கள் தலைவர்கள் படங்களை தவெக கட்சியினர் உபயோகிப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் தான். எங்களுடைய தலைவரை உலகம் முழுவதும் உள்ள எல்லா தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் தலைவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.
ஆனால், அதேநேரத்தில் ஓட்டுக்கள் வருமா, வராத என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக அண்ணா திமுக ஓட்டு என்பது எம்ஜிஆர், அண்ணா படத்தை வைப்பதால் மட்டும் அந்த ஓட்டுகள் விஜய்க்கு போகாது. அது மட்டும் மிக உறுதியாக கூறுகிறேன்.
அண்ணாவை வணங்கட்டும், போற்றட்டும். பேருந்தில் அண்ணா, எம்ஜிஆர் தலைவர் திரு உருவங்களைப் பதியட்டும். அதில் எங்களுக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், அதுவே அண்ணா திமுகவின் ஓட்டு விஜய்க்கு போகுமா என்றால் போகாது. விஜய்க்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சும். முன்பு விஜய் ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசும்போது, ஸ்டாலின் அங்கிள் என்று குறிப்பிட்டார். பின்னர், சிஎம் சார் என்று குறிப்பிட்டார்.
என்னிடம் விஜய் கேட்டிருந்தால் நானே நல்ல லீடாக கொடுத்திருப்பேன். சிஎம் ஸ்டாலின் என்பதற்குப் பதில் சிஎம் சாத்தான் சார் என்று கூறியிருக்க வேண்டும். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை மை டியர் குட்டிச் சாத்தான் என்று சொல்லியிருக்க வேண்டும். என்னிடம் கேட்டால் இப்படிதான் சொல்லியிருப்பேன். ஆட்சியைப் பொருத்தவரை, அமைச்சர் நேரு கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் முனைப்பாக இருக்கிறார்.
சென்னையைப் பொருத்தவரையில் அக்டோபர், நவம்பரில் பலத்த மழை இருக்கும் என்று கூறுகின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் நேரு, பெரு மழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளார். தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமல் இப்போது இருக்கும் திமுக அரசு தோல்வியைத் தழுவி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications