மாஜி அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு.. வழக்குகள் மூலம் அதிமுகவை அழிக்க முடியாது - ஜெயக்குமார்
எத்தனை வழக்குகளை சந்தித்தாலும் புடம் போட்ட தங்கமாக வெளியே வருவோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுகவினர் மீது அடக்குமுறைகளைகையாளும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எத்தனை வழக்குகளை சந்தித்தாலும் புடம் போட்ட தங்கமாக அதிமுக மீண்டு வரும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடியில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசயா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

காமராஜ் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் கண்டனம்
இந்த சோதனைக்கு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

49 இடங்களில் சோதனை
இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான வீடுகளிலும் அவர் தொடர்புடைய 49 இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. உறவினர்கள், நண்பர்களை எல்லாம் அசிங்கப்படுத்த வேண்டும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது.

களங்கம் கற்பிக்க முயற்சி
அதிமுகவினர் மீது அடக்குமுறைகளை ஏவி களங்கம் கற்பிக்க முயன்றால் பந்து போல மேலே வருவார்கள். தண்ணீரில் எப்படி பந்தை அமுக்கி வைக்க முடியாதோ அதே போல அதிமுகவினரை அடக்கி வைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார். ரவுடியை பிடித்து கொடுத்த என் மீது 25 பிரிவுகளின் கீழ் 4 வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் நிரூபித்து அனைத்து வழக்குகளில் இருந்தும் வெளியே வருவோம் என்றார்.

மக்கள் தீர்ப்பளிப்பார்கள்
எங்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று நினைத்தால் பூனை கண்களை மூடிக்கொண்டது போலத்தான் ஏற்படும். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலின் போதும் மக்கள் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications