அண்ணாமலை என்கிற வேதாளம் அதிமுகவை விட்டுட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது: ஜெயக்குமார்
சென்னை: அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அப்போது பேசிய ஜெயக்குமார், "அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டையான ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்.
ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது. டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த அதிமுக கட்சி அலுவலகத்தையே சென்று உடைத்திருக்கிறார் ஓபிஎஸ். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம். ஆனால் ஓபிஎஸ்ஸிடம் கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் கிடையாது.
கட்சியிலேயே இல்லாத சசிகலா எவ்வாறு அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைப்பார்? அதிமுக தொண்டர்களை 90% இணைத்ததாக சசிகலா கூறுவது முழு சுவற்றில் பூசணிக்காயை மறைப்பது போன்றது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததுதான் 90 சதவீதம் இணைப்பு என்று எதுவும் இல்லை. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை." என்றார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். இதில் முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்கக் கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. லுங்கி அணிந்து கொண்டு நான் பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல, இன்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்களும் லுங்கி அணிகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவ மரியாதைக்குறிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன்" என தெரிவித்தார்.
அண்ணாமலை - செல்வப்பெருந்தகை இடையேயான வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் செல்வப்பெருந்தகை என அண்ணாமலை பேசியதால், அவதூறு சொல்லும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை. ஆனால் செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் என அண்ணாமலை பதில் கொடுத்துள்ளது குறிப்பிடத்தகக்து. இந்த மோதல் முற்றி வரும் நிலையில் தான் ஜெயக்குமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications